நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள் - சௌந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி

சௌந்தர்யா! ஒரு சூப்பர் ஸ்டாரின் மகள் என்பது தானாக வந்த பெருமை. இளம் வயதில் தமிழ்த்திரையுலகில் தயாரிப்பாளராகியிருப்பது. தேடிக் கொண்டிருக்கும் திறமை. 'கோவா' படத்தின் மூலம் தானும் ஒரு தயாரிப்பாளராகத் தடம் பதிக்கிறார் சௌந்தர்யா. ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்த போது ஒரு பனித்துளியைப் போன்று எளிமையாக இருந்தார். கர்வம் கலவாத உற்சாகமாகப் பேசினார்.

கிராபிக்ஸ் ஸ்டுடியோஸ் நடத்தி வந்த நீங்கள் தயாரிப்பாளரானது எப்படி?

'ஆக்கர் ஸ்டுடியோ எனக்கு குழந்தை மாதிரி. மூன்றரை ஆண்டுகளுக்கு முன் 10 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 120 பேருடன் பெரிய குடும்பமாகியிருக்கிறது. இங்கு கிராபிக்ஸ் வேலைகள், டிஜிட்டல் எடிட்டிங், கலர் கிரேடிங், அனிமேஷன் என்று வளர்ந்த இன்று அடுத்த கட்டமாக படத் தயாரிப்பிற்கு வந்து இருக்கிறது. சினிமாவில் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் துறை தயாரிப்புத்துறைதான். அதனால் தான் நான் படம் தயாரிக்க முடிவெடுத்தேன்'.

உங்கள் தயாரிப்பு நிறுவனப் படங்கள் எப்படி இருக்கும்?

தரமான ஜாலியான ரிச்சான எண்டர்டெய்னராக இருக்கும். தொழில்நுட்ப ரீதியிலும் பேசப்படும். கதை விஷயத்திலும் கவனிக்கப்படும். புதிய நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், கேமரா மேன்கள், மேக்கப்மேன், எடிட்டர்ஸ் என்று பல புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க ஆசைகள் உண்டு. அதற்கான திட்டத்துடன் செயல்பட இருக்கிறோம். அடுத்த ஜெனரேஷன் இளைஞர்களுக்கு நல்லதொரு ப்ளாட் பார்மாக எங்கள் நிறுவனம் இருக்கும்''.

கிராபிக்ஸ் துறையில் உங்கள் நிறுவனம் செய்தது என்ன?

தமிழிலும் கன்னடத்திலும் நிறைய படங்களுக்கு செய்திருக்கிறோம். செய்து கொண்டும் இருக்கிறோம் 10 படங்கள் வருகிறது என்றால் அதில் 9 படங்களில் கிராபிக்ஸ் இருக்கும். ஆனால் எந்தக் காட்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது வெளியே தெரியாது. 'சென்னை - 28' படத்தில் ஒரு டென்னிஸ் பந்து வருமே, அது நிஜபந்து அல்ல. கிராபிக்! பந்து.. அதுபோல நிறைய உண்டு. நிறைய படங்களுக்கு கிராபிக்ஸ் அமைத்தும் வருகிறோம்'.

வெங்கட் பிரபுவை உங்கள் முதல் தயாரிப்புக்கு இயக்க வைத்தது எப்படி?

எங்கள் கம்பெனியில் 120 பேர் வேலை பார்க்கிறார்கள். நான் முதலாளி மாதிரியோ, தொழிலாளி மாதிரியோ இருக்க மாட்டோ ம். நான் எல்லோரிடமும் ப்ரண்ட்லியாகப் பழகுவேன். எங்கள் நிறுவன வளர்ச்சிக்குக் காரணம் டீம் ஓர்க்தான். அதைப் போலவே வெங்கட்பிரபுவின் டீமும் இருக்கும். எல்லாருடனும் அவரும் என்னைப் போலவே ஃப்ரண்ட்லியாக இருப்பார். இது எனக்குப் பிடித்திருந்தது.

'சென்னை - 28' எனக்கு பிடித்த படம். அடுத்த 'சரோஜா' தொடங்கும் முன்பே இவர்தான் நம் தயாரிப்பில் முதல்படம் இயக்குபவர் என்பதை முடிவு செய்து விட்டேன். அவர் சொன்ன கதை பிடித்த உடனே ஓகே சொல்லி விட்டேன். அதுதான் 'கோவா'.

கோவா கதை எப்படி?

இது ஒரு ஜாலியான ரொமாண்டிக்கான காமெடியான சென்டிமெண்ட் நிறைந்த லவ்ஸ்டோ ரி. இத்தனையும் நிறைந்த மாதிரி யூத் புல்லா - கலர் ஃபுல்லா ஒரு படம் வெங்கட் பிரபுவால் மட்டுமே கொடுக்க முடியும். 'கோவா' வரும் பாருங்க..'.

நீங்கள் இயக்கி உருவாக்கி வரும் 'சுல்தான் தி வாரியார்' எந்த அளவில் இருக்கிறது?

'அது ஒரு த்ரிடி' அனிமேஷன் படம் ஆனால் கண்ணாடி தேவையில்லை. நம் நாட்டில் இன்னமும் பிரபலமாகாதது. அதில் அப்பாதான் ஹீரோ. இது கார்ட்டூன் படமல்ல. அனிமேஷன் படம். இது லைவ்வாக எடுக்கப்பட்ட படம் போலவே இருக்கும். இதற்கு நிறைய நேரம் தேவைப்படும். ஒரு வினாடிக்கு 24 ப்ரேம்கள் ஒடும் என்றால் அதில் ஒவ்வொரு பிரேமிலும் செய்ய வேண்டியிருக்கும்.

நான் உருவாக்கி வரும் 'சுல்தான்' என் கனவுப் படைப்பு. இதில் அப்பாவை அப்படியே காட்டும் படம். அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். இதற்காக அப்பாவை வைத்து பத்து நாட்கள் 'இன்ஃப்ராரெட்' கேமராவில் படப்பிடிப்பு நடத்தினேன். அப்பா மேனரிசம் வேண்டும் என்று அதிலுள்ள அசைவுகளில் அனிமேஷன் பொருத்த வேண்டும். மிகவும் சிரமமான - நேரம் பிடிக்கும் வேலை. ஆனால் விளைவு பிரமாதமாக இருக்கும். படம் முடிந்து வந்தால் பேசப்படும். இந்தியாவில் இதற்குரிய மவுசு அப்போதுதான் ஆரம்பமாகும். வெளிநாடுகளில் 'லைவ் ஷூட்' படங்களைப் போல அனிமேஷன் படங்களுக்கும் நல்ல வரவேற்பும் வியாபாரமும் இருக்கிறது. 'சுல்தான்' நம்முருக்கு பெரிய வாசலைத் திறந்து வைக்கும் படமாக இருக்கும். அது மட்டும் நிச்சயம்'.

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எந்த மாதிரியான படங்கள் பிடிக்கும்?

எனக்கு எல்லாப் படங்களும் பிடிக்கும். ரொமான்டிக், காமெடி, ஆக்ஷன்.. எல்லாம் பிடிக்கும். ஆக்ஷன் பிடிக்கும் அதற்காக வயலன்ஸ் பிடிக்காது. வெட்டு, குத்து, ரத்தம், கைகால் வெட்டி துண்டாக்குவது போன்ற கோரமானவை பிடிக்கது. காமெடி பிடிக்கும். எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். ஒரு படம் பார்த்து அழுது ஒரு சொட்டுக் கண்ணீர்விடலைன்னா படம் பார்த்த மாதிரியே இருக்காது என்பார். நான் இதற்கு நேரெதிர். ஒரு படம் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கவில்லை என்றால் படம் பார்த்த மாதிரியே இருக்காது. அதே சமயம் பிரியட் பிலிமையும் ரசிப்பேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்பது உங்களுக்கு எந்த அளவுக்குப் பெருமை? எந்த அளவுக்குத் தடையாக இருக்கிறது?

நான் எங்கள் அப்பா அம்மாவுக்குப் பிறந்தது நான் பெற்ற பாக்கியம். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதால்தான் எனக்கு இந்தப் பெருமை. அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் எங்கள் அப்பா ரஜினிகாந்தின் மகள் என்பது எவ்வளவு பெருமையோ அதே போல சில நேரம் தடையாக இழப்பாகத் தோன்றும். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல இருக்கும் என்று கூறலாம்.

நான் என் அப்பாவைப் போல எளிமையாக இருக்க விரும்புவேன். என் அப்பா அப்போது பஸ் கண்டக்டராக இருந்தபோது எப்படி இருந்தாரோ அதே எளிமையுடன்தான் இன்றும் இருக்கிறார். இப்படித்தான் நானும் இருக்க ஆசை. ஆனால் மற்றவர்கள் அப்படி என்னை நினைப்பதில்லை. நாங்கள் ஆக்கர் ஸ்டுடியோஸ் நடத்துகிறோம். எங்களிடம் வேலைக்கு வரும் படங்களுக்கு கிராபிக்ஸ் செய்து கொடுக்கிறோம். போய்ப் பார்த்துவிட்டு திருப்தியில்லை. என்றாலோ மாற்ற வேண்டும் என்றாலோ சொல்லத் தயங்குகிறார்கள். பிடிக்கவில்லை என்றால் என்ன சொல்வார்களோ என்று நினைக்கிறார்கள். இது எனக்கு சங்கடமாக இருக்கும். நான் சாதாரண சௌந்தர்யாவாக ஒரு ஸ்டாரின் மகள் என்பது ஒரு தடையாகத் தோன்றும். என் அப்பா ஒரு கிங். நான் ஒரு சாதாரண பெண். எளிமையாக இருப்பதில் மட்டும் அப்பா மாதிரி இருக்க ஆசை.

ஒரு பெண் தயாரிப்பாளராக என்ன உணர்கிறீர்கள்?

'எல்லா பெண் தொழில் அதிபர்களும் சந்திக்கும் பிரச்சினைகள் எனக்கும் இருக்கிறது. கடந்து செல்ல வேண்டிய தடைகள் எனக்கும் உண்டு. யதார்த்தமான பிரச்சினைகள் எனக்கும் வரும். ஒரு நாள் படப்பிடிப்புக்குப் போகிறோம். மழை வருகிறது அன்று எடுக்க முடியாது. திரும்பி வரவேண்டும். நஷ்டம்தான். மறுநாள் போய்தான் எடுக்க வேண்டும். இது தவிர்க்க முடியாது'.

அடுத்து தயாரிக்கும் படங்கள்?

'ஒரு நேரத்தில் ஒரு படம். இது என் இப்போதைய பாலிசி. இப்போது ஏழெட்டு நல்ல கதைகளைக் கேட்டு வைத்திருக்கிறேன். போகப் போக ஒவ்வொன்றாக படமாகும்.

உங்கள் வெற்றியின் பின்னே இருப்பது எது?

'ஆக்கர் நிறுவனத்தைப் பொறுத்தவரை எங்கள் டீம். வேலைப்பார்ப்பவர் நம்மைப் பார்த்தால் எழுந்து நிற்க வேண்டும் என்று நினைக்கும் முதலாளி இல்லை நான். என்னைப் பார்த்ததும் வேலை பார்ப்பவர்களும் அல்ல அவர்கள். ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. அவரவர் வேலையில் திறமைகாட்ட வாய்ப்புகள் உண்டு. 120 பேருமே அவரவர் வேலைகளில் அவர்கள்தான் பெரியவர்கள். இப்படி நட்பாக அணுகுவது என் பாணி. அதனால்தான் இந்த டீம் வளர்ந்து இருக்கிறது' என்று தெளிவாகச் சொல்கிறார் சௌந்தர்யா.