அஜய் - தீபா வெங்கட்

கோலங்கள் தொடரில் எலியும் பூனையுமாக முட்டி மோதும் ஆதியையும், உஷாவையும் நிஜத்திலும் கொஞ்சம் சண்டை போட வைத்தாலென்ன என்று நாம் கிளம்பினோம். ரெண்டு பேரிடமும் விஷயத்தை சொல்ல ஓ.கே. என்றனர். நாம் என்னதான் சண்டை மூட்டி விட நினைத்தாலும் பார்ட்டி ரெண்டும் செம ஷார்ப், செம ஸ்மார்ட். நீங்க தான் இப்போ சீரியல் ஹீரோக்களில் நம்பர் ஒண்ணாமே? அஜய்(ஆதி)யிடம் முதல் கேள்வியை கேட்டு ஆரம்பித்து வைத்தோம். 'அபி... அபி...' என்று கத்துவதில் மட்டுமல்ல, மன்னர் பேச்சிலும் படு கில்லாடி, நம்பர் ஒன், நம்பல் டூ இதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு முன்னாடி விஜய் ஆதிராஜ் சார், வேணு அரவிந்த் சார், அபிஷேக் சார் எல்லாருமே நல்ல திறமைசாலிங்க. எனக்கு கிடைச்சத நான் செய்றேன். ஆனால் இப்படி இருக்கிறதுல நான் சந்தோஷப்படுறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்த திருச்செல்வம் சார், புரொடியூசர் சார் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன் என்று மிக நீஈ...ஈ....ஈ......ளமாய் உருக, போனால் போகட்டும் என்று பதில் சொல்லி முடிக்கும் வரை பொறுமை காத்த கலைமாமணி தீபா வெங்கட், 'புரோகிராமையே முடிச்சு வைச்சாச்சா, ஒரு கேள்வி கேட்டதுக்கு எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியாச்சு' என்று தடாலடியாக டபாய்க்க, 'இல்ல.. இல்ல.. நான் இங்கதான் இருக்கேன், எங்கேயும் போகல' என்று அஜய் சமாளிக்க, விடுவதாயில்லை தீபா. 'மெகா சீரியல்ல நடிச்சு, நடிச்சு இப்படி ஆயிட்டாரு முன்னாடியெல்லாம் தமிழ் தெரியாது, பேசவே மாட்டாரு, இப்போ கத்துக்கிட்டாரு நிறுத்தவே மாட்டேங்கிறாரு' என டீடெய்ல்ஸ் சொல்கிறார் தீபா. அஜய், ஆமாமா சீரியல்ல டயலாக் பேசிப்பேசியே இப்படி ஆயிட்டேன். (ஆஹா! மனுஷன் இங்கேயாவது பொம்பள வார்த்தைக்கு மதிப்பு குடுக்கிறாரே!) நடிகை தீபா வெங்கட், பின்னணி பாடகி ஆகப் போறீங்களாமே? நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கிறப்பதான், சிந்துபைரவி படம் ரிலீசாச்சு அப்ப நான் 'நானொரு சிந்து காவடி சிந்து' பாட்டை எப்ப பார்த்தாலும் பாடிட்டே இருப்பேனாம். அதனால எனக்கு பாட்டுக்கத்து தரணும்னு அம்மாவுக்கு ஆசை. அப்ப இருந்து பத்தாம் கிளாஸ் படிக்கிறவரை பாட்டு கிளாஸ் போனேன். இடையில் ஒரு சின்ன பிரேக் ஆயிடுச்சு. இப்போ மறுபடியும் மூணு வருஷமா பாலமுரளி கிருஷ்ணாவோட சிஷ்யர் சேகர் மாஸ்டர்கிட்ட கத்துக்கிட்டிருக்கேன். அவர், பாடகி மகதியோட அப்பா''. ''இதுவரை நான் எங்கேயும் நான் பாடகியாக சான்ஸ் தேடிப் போகல. சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா பண்ணுவேன். கூடவே இருக்கும் அஜய்யிடம் கருத்து கேட்காமல் விடலாமா? தீபா நல்லா பாடுவாங்களா? அது நிஜமா? என ரூட் பிடித்துக் கொடுக்க ''ஆமா, ரொம்ப நல்லா பாடுவாங்க, மோகன் சர்மா சார் கூட டூயட்லாம் பாடுவாங்க. அவங்க பாடுறது புரியாது பட் நல்லாயிருக்கும். அதிலும் பக்திப் பாட்டெல்லாம் செம சூப்பரா பாடுவாங்க'' (கவித்துட்டீங்களே பாஸ்! கலாய்ப்பீங்கன்னு பார்த்தா, சரண்டர் ஆயிட்டே இருக்கீங்களே!) கோலங்களில் நீங்கள் ஒரு டென்ஷன் டெவில், ரீயல் அஜய் எப்படி? ''நான் ரிசர்வ் டைப், நிறைய பேசமாட்டேன். ஆனா பழகிட்டா ரொம்ப பேசுவேன். எனவே ப்ரண்ட்ஸ் ரொம்ப கம்மிதான். ஆனா ஒரு தடவை பழகிட்டா பாசமா இருப்பேன். கேமரா முன்னாடி நாங்க இருக்கிறதுக்கும் 'கட்' சொன்னதுக்கப்புறம் நாங்க கலாட்டா பண்றதுக்கம் சம்பந்தமே கிடையாது. சப்போட்டாகப் போகிறார் தீபா. சீரியல்ல காதலிக்கிறீங்க... நிஜத்தில் காதல் ஏதும் உண்டா? மெல்ல தீபா வெங்கட் பக்கமாக 'காதல் எல்லோருக்குமே ரொம்ப முக்கியம், அது இல்லாம நம்ம இல்ல! அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, அக்கா.... இப்படி இவங்களோட அன்புதான் நமக்குப்பலம். இவங்களோட அக்கறைத்தான் நமக்குப் பலம். ஒரு கஷ்டத்துல அவங்க ஆதரவுதான் நம்மை வழிநடத்தும். அதனால காதல் எல்லோருக்குமே ரொம்ப முக்கியம். பார்ட்டி தத்து வார்த்தமாக பேசி நழுவப் பார்க்க... நாம் விடுவதாயில்லை. உங்க கல்யாணம், அரேன்ஜ்டு மேரேஜா இருக்குமா? லவ் மேரேஜா? என கொக்கி போட்டோ ம். வலது கை நடுவிரலால் நெற்றி நடுவில் கோடு கிழித்துக் காட்டுகிறார். இங்க என்ன எழுதியிருக்கோ, அது தான் நடக்கும். ஆனா அது பண்ணாலும் அப்பா, அம்மா சம்மதத்தோட தான் நடக்கும். எங்கம்மாகிட்ட எதையும் சொல்லாம என்னால் இருக்க முடியாது (அடேங்கப்பா, ஐஸோ ஐஸ்!) அஜய், மக்கள் மத்தியில் மாட்டிகிட்டு அவஸ்தைப்பட்டதுண்டா? ஒரு தடவை திருச்சிப் பக்கம் ஒரு கிராமத்துல ஒரு ஷோவுக்கு போயிருந்தேன். அங்க ஒரு நாலு லேடீஸ் என்னை 'ஆதி'யா நினைச்சிட்டு அடிக்க வந்துட்டாங்க. மத்தவங்கள்லாம் உதவிக்கு வந்தாங்க. அவங்க மேல நான் எதுவும் தப்பு சொல்லல. நான் பண்ற கேரக்டர் அப்படி. அப்புறம் ஒரு வழியா அவங்ககிட்டயிருந்து தப்பிச்சேன். எனக்கு பாசிட்டிவ் கேரக்டரை விட நெகட்டிவ் கேரக்டர்ஸ்தான். நீங்கள் நடிக்காம உங்களுக்குப் பிடித்த சீரியல்ஸ்...? அஜய், 'மெட்டி ஒலி பார்த்தேன், சித்தி பார்த்தேன்.(மேடம் அதுல நடிச்சிருக்காங்க என்று தீபாவைக் காட்டுகிறார். 'டோ ன்ட் கால் மீ மேடம், மை நேம் இஸ் தீபா' என்று தீபா எகிற சிரித்துக் கொண்டே, சித்தியில் ரியாஸ்கான் பண்ண கேரக்டர் நான் இந்தியில பண்ணினேன் என்று அஜய் புள்ளி விபரம் சொல்ல, ஒஹோ! அப்ப இருந்தே கொடுமைப் படுத்துறதுக்காக திட்டம் போட்டு இப்ப கோலங்கள்ல வந்து கொடுமைப்படுத்துறாருப்பா... என்று ஜல்லியடிக்கிறார் தீபா. எனக்கு பிடிச்ச சீரியல்னா ஆனந்தம் பார்ப்பேன், மலர்கள் பார்த்தேன் அது ரொம்ப நல்லா இருந்துச்சு. கோலங்கள் யூனிட் பற்றி... 'வெரி கூல் யூனிட், நல்லா அரட்டை அடிப்போம். அக்சுவலா கோலங்கள் சூட்டிங் பிக்னிக் போற மாதிரி, ஹாலிடே டூர் போற மாதிரி அவ்ளோ அழகா இருக்கும். ஏன்னா நல்ல லொகேஷன்ல சூட்டிங், ரொம்ப ப்ரெண்ட்லியான ஆர்ட்டிஸ்ட் குரூப். நல்ல ரிலாக்ஸ்டான ஒர்க் என்விரான்மெண்ட். கோலங்கள் யூனிட் வெரி சூல் யூனிட்'', கோரஸமாக சொல்கிறார்கள். நிஜத்தல உங்களுக்குள்ள சண்டை வந்ததுண்டா? ஆமா! நிறைய சண்டை போட்ருக்கோம். என்று தீபா புழுக, நான் எங்கே சண்டை போட்டேன் என்று அப்பாவியாய் கேட்க, அதுவும் ஒரு அழகான சண்டைதான். எங்களுக்குள் சண்டை வந்ததே இல்ல. சண்டை போடுறதுக்கு நாமென்ன சின்னப் பிள்ளைங்களா? என்று தீபா அனுபவப் பட்டாசாய் படபடக்கிறார். யூனிட்ல அஜய் தான் நியூஸ் இன்பார்மர். டெய்லி லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட் குடுப்பார். அஜய் அலைஸ் ஆதி அலைஸ் கௌரவ் கபூர். (அதாங்க ஆதியோட நிஜப்பெயர்). அம்மாவா நடிச்சீருக்கீங்க... அந்த அனுபவம் பற்றி? 'அது ரொம்பப் பெரிய அனுபவம். இப்படி ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிச்சதே இல்லை. சூட்டிங்ல உஷா பையன் யாருன்னு கேட்டாலே, நெஞ்சில் கைய வச்சி 'நான் நான்னு' சொல்லிக் காட்டும். நான் எங்க போனாலும் என்னை கைகாட்டி 'ம்மா...ம்மா'ன்னு சத்தம் போடும். நிறைய குழந்தைங்க சூட்டிங்குக்கு வருவாங்க. ஆனா இந்த மாதிரி ஆக்டிங் சென்சோட ஒரு குழந்தை நான் பார்க்கல. சமீபத்துல ஒரு சீன் சூட் பண்ணோம். குழந்தை தூங்கிக்கிட்டிருக்கும். அஜய் குழந்தை மேல கைய வச்சிருப்பாரு. அவர் கைமேல நான் கைவைப்பேன். என்னோட கைமேல நான் கைவைப்பேன். என்னோட கைமேல அஜய் இன்னொருகைய வைப்பாரு. நாங்க பழையபடி செட்டாகிற மாதிரி ஒரு இன்கேசன் அந்த சீன். ஷாட் முடியறதுக்குள்ள குழந்தை எழுந்திருச்சு கண்ணைத் திறந்து அங்கேயும் இங்கேயும் பார்த்தச்சு. இன்னும் ஷாட் முடியலம்மா... தூங்குன்னு சொன்னவுடனே மறுபடிபடுத்துசிகிச்சு. கண்ணை மூடும்மா, கண்ணை மூடுன்னு சொன்னவுடனே கண்ணை முடிக்கிச்சு. நாங்க கட் சொல்லி லைட் ஆப் பண்ற வரைக்கும் அப்படியே இருந்துச்சு. ரியலி நைஸ் குழந்தை. ''திருச்செல்வம் சார் எப்பவுமே பெஸ்ட் தான் செலக்ட் பண்ணுவார். இந்த குழந்தை உள்பட. உங்களுக்கு பிடிச்ச சீரியல் நடிகை? அஜய்யை தீபாவிடம் மாட்டி விடும் ஆசையில் கேள்வியை கேட்டுவிட்டு ரிலாக்ஸ்டாக காத்திருந்தோம். பார்ட்டி நிறைய யோசித்ததை பார்த்து, ''என்னைத் தான் சொல்லணும்னு இல்ல! யாரை வேணும்னாலும் சொல்லலாம்'' என்று அனுமதி கொடுக்கிறார் தீபா. அப்படியும் நீளமாய் யோசித்துவிட்டு, எனக்குப் பிடிச்ச சீரியல் நடிகைன்னா, தீபா வெங்கட். வெரிஃபைன் ஆர்ட்டிஸ்ட். அவங்க இங்க இருக்கிறதுனால சொல்லல. ஏன்னா இவங்களோட மெமரி பவரைப் பார்த்து நான் பிரமிச்சிருக்கேன். அப்புறம் தேவிப்பிரியா மேடம், தேவயானி மேடம், திவ்யாதர்ஷனி மேடம் என்று அஜய் பட்டியலிட, ஆல் த திஸ்' என பஞ்ச் வைக்கிறார் தீபா. தீபா, உங்களுக்கு பிடிச்ச சீரியல் நடிகர்? அபிஷேக் சார். ரொம்ப எமோஷனலான ஆர்ட்டிஸ்ட். அவர் கூட நடிக்கிறப்போ, அவர் நடிக்கிறப்போ, அவரை நடிப்பைதான் கவனிச்சிட்டிருப்பேன். நான் என்ன பண்ணனும்கிறதை மறந்திடுவேன். அப்புறம் அஜய். எத்தனை சேனல் இருக்கு, எத்தனை சீரியல் போகுது. அதுல பெஸ்ட் சீரியல்ல, பெஸ்ட் கேரக்டரா நடிக்கிறாருன்னா பெரிய விஷயம்தானே! போகிற இடத்தில எல்லாம் ஆதின்னுதான் கூப்பிடுறாங்க. அப்படின்னா பாருங்க. சாட்சியங்களுடன் பாராட்டுகிறார் தீபா. சின்னத்திரை பெரியதிரை? தீபா, 'நான் ரெண்டு இண்டஸ்ட்ரிலயும் ஒரு நடிகைதான். எனக்கு ரெண்டுமே ஒண்ணுதான். ஆனா சின்னத்திரை முன்னைவிட இப்ப வளர்ந்திருக்கு! வளர்ந்திட்டிருக்கு! தீபா சொல்ல, அதை ஆமோதிப்பது போலவே, நான் ஒரு விஷயம் சொல்லணும் சினிமா டைரக்டர்ஸ், ப்ளீஸ் நல்ல சீரியல்ஸ் பார்த்துட்டு நல்ல படம் எடுக்க டிரை பண்ணுங்க. மொழி மாதிரி சென்னை 28 படம் மாதிரி எடுங்க. அப்போதான் மக்கள் தியேட்டருக்கு வருவாங்க. அதை விட்டு திருட்டு வி.சி.டி.யில பார்க்கிறாங்கன்னு சொல்லாதீங்க'' என்று சூடானவரை கூலாக்க, குடும்பத்துடன் நேரம் செலவிட முடிகிறதா? என்று கேட்டோ ம். ஆமா, பேமிலியோட நிறையநேரம் செலவிடுவேன். மாசத்துக்கு அஞ்சாறு தடவையாவது வெளியே போவோம். இப்பக்கூட சக்தே இந்திப்படத்துக்கு போனோம். எல்லோரும் கிரிக்கெட் பின்னாடி அலையுறப்போ நம்ம தேசிய விளையாட்டை வைச்சி அழகா ஒரு படம். என் பையன் விசேஷ். ரெண்டு வயசு ஆகப்போகுது, அவர்கூட நிறைய நேரம் விளையாடுவேன் என்று கூலாக சொல்ல, நாமும் கூலாக பை சொல்லி விடைபெற்றோம்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com