இயக்குனர் முருகதாசுடன் இணைந்து தமிழ்ப்பட தயாரிப்பில் இறங்கும் ஃபாக்ஸ் ஸ்டார்!
உலகெங்கும் பிரபலமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் திரைப்பட நிறுவனம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஸன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்ப்பட தயாரிப்பில் இறங்குகிறது.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சி.இ.ஓ. விஜய் சிங், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் தலைவர் ஷான்பர்ட் பனிட்ச் ஆகியோர் இதன் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டனர்.
ஃபாக்ஸ் 40 நாடுகளில் தன்னுடைய அலுவலங்களை கொண்டுள்ளது. ஸ்டார் விஜய் நெட்வொர்க் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும். தவிர இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக ஆகியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இருக்கிறார். நல்ல பல திரைப்படங்கள் தமிழில் தயாரிக்க வேண்டும் எங்கள் விருப்பம் என்றார் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சி.இ.ஓ. விஜய் சிங்.
இந்தக் கூட்டணியின் முதல் படத்தை இயக்கபோவது ஏ.ஆர்.முருகதாஸின் இணை இயக்குனர் சரவணன். இன்னும் பெயரிடப்படாத அந்தப்படத்தின் நாயகர்களாக விமல் மற்றும் ஜெய் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. தமன் இசை அமைக்கிறார். பொல்லாதவன் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனர் ஜாக்ஸன்.
முற்றிலும் மாறுபட்ட காதல் கதையாக இந்தப்படம் இருக்கும். சென்னை மற்றும் திருச்சியில் நடைபெறும் கதையில் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு விஷயம் இருக்கும். அல்லது அந்த விஷயத்தை சொல்வதில் வித்தியாசம் இருக்கும் என்கிறார் இயக்குனராக அறிமுகமாகும் சரவணன்.
பிப்ரவரி மாதத்தில் இந்த முதல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஸன்ஸ்.

