விலை - விமர்சனம்
விலை என்று படத்திற்கு படம் பெயர் வைத்திருக்கும்போதே தெரிந்திருக்குமே... ஆமாம் இது விலை மாதர்கள் பற்றிய கதை தான்.
குழந்தைகளும், மாணவிகளும், வேலைக்குச் செல்லும் பெண்களும் கடத்தப்பட்டு விலைமாதர்கள் ஆக சீரழிக்கப்படுகிற கனமான உண்மையை கொஞ்சம் கமர்சியலாக சொல்லி இருக்கிறார்கள்.
பரணி படிப்பு வராத இளைஞன். தங்கை ரிது படிப்பில் கெட்டி. இதனாலேயே இருவருக்குள்ளும் ஏழாம் பொருத்தம் எட்டாம் பொருத்தமாக இருக்கிறது.
தங்கையை சென்னையில் படிக்க அண்ணனும் தங்கையுமாக சென்னை வருகிறார்கள். சென்னை இவனை அட்ரஸ் தேடச்சொல்லும் வாடகைக்கார் டிரைவர் தங்கையை கடத்துகிறான். தங்கையை காணாமால் உறைந்துபோகும் பரணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கிறான். அது தண்ணீரில் எழுதிய எழுத்தாக போய்விட... அந்த டிரைவரை தேடிக்கண்டுபிடிக்கிறான். கைகலகலப்பாகும் நேரத்தில் அங்கே வருகிறார் டெபுடி கமிஷனர் சரவணன். உண்மையை கேள்விப்படும் சரவணன், பரணிக்கு உதவ முன் வருகிறார்.
ஆந்திராவுக்கு கடத்திக்கொண்டு போகப்படும் தங்கையையும் பிற பெண்களையும் மீட்க விரைகிறார்கள். எல்லா தடைகளையும் தாண்டி பெண்களை கடத்தி உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் ஏலத்தில் விற்கும் பொம்பளை தாதா மிர்ச்சி மாயாவிடம் சேர்க்கப்படுகிறார்கள் கடத்தப்பட்ட பெண்கள்.
சுமாராக இருந்தால் உள்ளூர் ஏலமும், சூப்பராக இருந்தால் வெளிநாட்டு ஏலத்திற்கும் தரம் பிரிக்கப்படுகிறார்கள். ஆந்திர பிரதேச பெபுடி கமிஷனர் பானுசந்தரிடம் உதவி கோருகிறார் சரவணன். நேர்வழியில் இது சாத்தியமே இல்லை. மிர்ச்சி மாயா ஏலத்தில் விடும் சமயம் விலை கொடுத்துதான் பரணியின் தங்கையை மீட்க வேண்டும் என்று பானுசந்தர் சொல்கிறார். கடைசியில் இருவரும் வீட்டில் இருக்கும் பணம் நகையை புரட்டி 60 லட்சத்திற்கு பரணியின் தங்கையை சரவணன் மூலமாக ஏலத்தில் எடுக்கின்றனர்.
சரவணன் டெபுடி கமிஷனர் என்பதை கண்டு பிடித்துவிடும் மாயா... அந்தப்பொண்ணை காப்பாத்த துடிக்கிறியா ஒம்பொண்ணா அவ இருந்து விபச்சாரியா மாறி இருந்தா என கேட்டு வைக்க... எம் பொண்ணு அப்டி பண்ணமாட்டா... அதையும் மீறி அப்டி பண்ணா சுட்டுக்கொன்னுடுவேன் என்க... பட்டென்று தனக்குத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்கிறான் மாயா.
மாயா சரவணனின் மகள் என்பது உபகதை. வாழ்க்கையில் எல்லாத்துக்குமே விலை உண்டுங்கிறது அவங்க போட்டிருக்கிற சப் டைட்டில்.
சரவணன் விஜயகாந்த்தை நிறையவே ஞாபகப்படுத்தினாலும் நடிப்பில் அனுபவசாலி என்று நிருபிக்கிறார். பரணி பக்கத்துவிட்டுப்பையன் போல யதார்த்தமான நடிப்பில் கதாபாத்திரத்தோடு ஒட்டி வாழ்ந்திருக்கிறார்.
கடத்தப்படும் பெண்களில் ஒருவராக நடித்திருக்கும் சாதிகா, மிக இயல்பான பாத்திரத்திலும் நடிப்பிலும் நம்மை ஈர்க்கிறார். கண்களை ஈரப்படுத்துகிறார்.
மரைக்காயராக வரும் தேவராஜ்... தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் புதிய குணச்சித்திர நடிகர். முகபாவனைகளில் மிரட்டுகிறார். வில்லப்பார்வை பார்க்கும்போதும் சரி... பழி வாங்கும் உணர்ச்சியை கண்களில் காட்டும்போதும் சரி... நம்மை மிரள வைக்கிறார்.
கடத்தப்படும் பெண்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு இணைய தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகிறார்கள் என்பதும் அவர்களை அரசோ... காவல்துறையோ நினைத்தாலும் மீட்க முடியாது என்பதும் நம்மை கலவரப்படுத்துகிறது.
சாதிகாவும், உதயதாராவும் சாகும் தருணங்கள்... வலி நிமிடங்கள். கடைசி வரை மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் சாதிகா... கடைசியில் அவர்கள் முன்னிலையிலேயே தற்கொலை செய்து கொள்வது உச்சக்கட்ட வலி.
அண்ணனும் தங்கையும் ஆரம்பத்தில் சண்டை போட்டுக்கொள்ளும் தருணங்கள்... அய்யய்யோ தாங்கல. அவ்வளவு செயற்கையா இருக்கு. அதே மாதிரி சின்னக்குழந்தையாக இருக்கும்போது கடத்தப்படும் மகள்... எம்பொண்ணு அப்டி இருக்க மாட்டான்னு சொல்வதெல்லாம் கொஞ்சம் கூட முதிர்ச்சியும் லாஜிக்கும் இல்லாத கதை சொல்லல். குழந்தையில் காணாமல் போகும் எப்படி இருந்தாலும் உயிரோடு இருக்கிறாள் என்பதே பாசக்கார தகப்பனுக்கு நல்ல செய்தி.
ஒண்ணுல இருந்து 100ஐ பாக்காதீங்க சார். 99லஇருந்து 100ஐ பாருங்க. பக்கத்தில இருக்கும். செத்துப்போயிட்டாளோன்னு நினைச்சேன் சார். என் தங்கச்சி உயிரோடதான் சார் இருக்கா சார்னு பரணி சொல்லும் காட்சியில்... வசனங்களும் நடிப்பும் நெகிழ்ச்சி.
இசை பரவாயில்லை. ஒளிப்பதிவு ரொம்ப சுமார். பெண்கள் இன்னும் கவனமாக இருக்கவேண்டும் என்பதையும் யாரிடமும் சீக்கிரத்தில் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பதையும் எச்சரிக்கை ஏற்படுத்துவது போன்ற கதையை தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குனர் காமராஜை ரொம்பவே பாராட்டலாம்.

