பேராண்மை
Cast: Jayam Ravi,
Direction:
Production:
Music:
பேராண்மை

இயற்கை விவசாயத்தை மேம்படுத்த இந்தியா விண்ணில் செலுத்தும் செயற்கைக்கோளை தகர்க்க, இந்தியாவுக்குள் காட்டுப்பகுதி வழியாக நுழைகிறது 16 பேர் கொண்ட சர்வதேச கூலிப்படை.

காட்டின் இண்டு, இடுக்கு, சந்து பொந்தெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் காட்டிலாகா அதிகாரி துருவனும், என்.சி.சி. பயிற்சிக்காக வந்த மாணவிகளில் ஏகத்துக்கும் அலப்பறை பண்ணிய 5 மாணவிகளும் சேர்ந்து அந்த கூலிப்படையை கதறடித்து, சிதறடித்து அவர்களின் முயற்சியை தடுக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் முதல் ஹாலிவுட் ஸ்டைல் படம் இதுவென்று சொல்லலாம். பழங்குடியினத்தின் வாரிசாக ''துருவன்'' பாத்திரத்தில் ஜெயம் ரவி ரொம்பவே பொருந்தி நடித்திருக்கிறார். காலங்காலமாக அடக்கப்பட்ட ஒரு இனத்தில் இருந்து சமுதாயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும் வலியை முகத்தில் ரொம்பவே பிரதிபலித்திருக்கிறார் ஜெயம் ரவி.

காட்டுக்குள் கூலிப்படையில் ஒவ்வொருவரையும் கனகச்சிதமாக போட்டுத்தள்ளும் காட்சிகளில் விறுவிறுப்பு, பரபரப்பு, பதைபதைப்பு. ஸ்டண்ட் இயக்குனர் மிராக்கிள் மைக்கேலின் டெக்னிக்கல் கத்திக்குத்து பிரமாதமான மிரட்டல்.

படத்தின் முதல்பாதியில் இயக்குனர் ஜனநாதன் ரொம்பவும் இயல்பாக எடுப்பதாக நினைத்துக் கொண்டு கேர்ள்ஸ் ஹாஸ்டல், அவர்களது லூட்டியை காட்டி இருப்பதை கூடுமானவரை தவிர்த்திருக்கலாம். அதோடு பாடல்கள் இல்லாமலும் எடுத்திருக்கலாம்.

மற்றபடி வாழைப்பழத்தில் ஊசி திணிப்பது போல படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஜனநாதன் கொஞ்சம் கொஞ்சம் அறிவூட்ட நினைக்கிறார். காட்டுக்குள் வழி தெரிய, கிளைகளை முறித்து செல்லும் திசைநோக்கி வைக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, ''நான் இங்கிலிஷ் பேசுனா எங்க மக்களுக்கு புரியாது, உங்களுக்கு பிடிக்காது'' என்பது மாதிரி ஜாதி அரசியல் பேசுவது வரை ஜனநாதன் ரொம்ப கனமான நாதன்.

கொல்லிமலை, களக்காடு என காட்டுப்பகுதிகள் ஆஹா அற்புதம் என்று புருவம் உயர்த்த வைப்பதோடு மட்டுமில்லாமல், இதெல்லாம் நம்மூரா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.

ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர், வடிவேலு பாசையில் சொன்னால் ''எத்தத்தண்டி'' என்று சொல்ல வைக்கிறார்.

சதிஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் மட்டுமல்லாமல் மலைப்பகுதியில் ஒரு டூர் போன உணர்வையும் தருகிறது. வித்யாசாகரின் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் படத்திற்கு உதவியிருக்கலாம். சாதாரண படங்களின் பின்னனி இசை போலத்தான் தெரிகிறது.

வடிவேலு காமெடி, இரட்டை அர்த்த வசனங்கள் இதுபோன்ற சராசரி விஷயங்களை தவிர்த்து இன்னும் மெருகூட்டி இருந்தால் பேராண்மை இன்னும் பெருமையான ஆண்மையாக இருந்திக்கும். ஆனால், இப்போதும் ''பேராண்மை'' தமிழ் சினிமாவின் ''பேராளுமை'' படம் என்பதில் சந்தேகமேயில்லை.