ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ், ஜோகோவிச் முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறினார். மெல்போர்ன் நகரில், 100வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், "நடப்பு சாம்பியன்' ஜோகோவிச், இத்தாலியின் லோரன்ஜியை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-2, 6-0, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ரேயான் ஹாரிசனை எதிர்கொண்டார். இதில் முர்ரே 4-6, 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், ஸ்பெயினின் டேவிட் பெரர், பிரான்சின் மோன்பில்ஸ், ரிச்சர்டு காஸ்குயட், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த், செர்பியாவின் ஜான்கோ டிப்சரிவிச், கனடாவின் மிலோஸ் ராவோனிச் ஆகியோர் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ரஷ்யாவின் டுஷிவினாவை 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுர், ருமேனியாவின் சோரானா சிர்ஸ்சிடியாவை எதிர்கொண்டார். இதில் ஸ்டோசுர் 6-7, 3-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷ்யாவின் ஷரபோவா 6-0, 6-1 என்ற நேர் செட்டில், அர்ஜென்டினாவின் கிசிலா டல்கோவை வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் செர்பியாவின் அனா இவானோவிச், ரஷ்யாவின் மரியா கிரிலன்கோ, கஸ்னட்சோவா, சுவனரேவா, நாடியா பெட்ரோவா, ஆஸ்திரேலியாவின் ஜெலினா டோகிச், பிரான்சின் மரியன் பர்டோலி, சுலோவாகியாவின் டொமினிகா சிபுல்கோவா, இஸ்ரேலின் ஷகர் பியர், அமெரிக்காவின் வானியா கிங், எஸ்தோனியாவின் கயா கனிபி உள்ளிட்ட வீராங்கனைகள் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஆஸ்திரியாவின் தமிரா பசக்கை எதிர்கொண்டார். இதில் அபாரமாக ஆடிய செரினா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

