இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் சல்மான் பஷீர் ஆகியோர் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா அடியோடு நிறுத்திவிட்டது. இந்த நிலையில் மும்பை தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் மீது நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்கத் தொடங்கிய பின்னர் கடந்த மார்ச்சில் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்கியது. இதுவரை இரண்டு முறை இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்த நிலையில் 3-வது முறையாக நிருபமா ராவ், சல்மான் பஷீர் சந்தித்து பேசவுள்ளனர். காலை 11 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நடைபெறும். இந்த சந்திப்பின்போது வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை வேரறுப்பது தொடர்பாகவும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு ஆபத்து என்று தனது கருத்தை இந்தியா வெளியிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குச் செல்லும் முதல் மூத்த இந்திய அதிகாரி நிருபமா ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூலை 15-ம் தேதி இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் நிருபமா ராவ், சல்மான் பஷீர் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளிலும் அமைதி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த சந்திப்பு நடைபெறுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின்போது லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் குறித்த தனது கவலையை இந்தியா எழுப்பும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளுமே போராடி வருகின்றன. இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரவேண்டும் என்று இந்தியாவிடம், பாகிஸ்தான் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இரு நாட்டு வெளியுறவுத் துறை செயலர்கள் சந்தித்துப் பேசவுள்ளதால், இரு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் துவங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியை, நிருபமா ராவ் சந்தித்துப் பேசுவார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ஏற்பாடு செய்துள்ள அதிகாரப்பூர்வ இரவு உணவு விருந்தில் நிருபமா ராவ் கலந்துகொள்வார். அதன் பின்னர் ஜூன் 25-ம் தேதி கனடாவுக்கு நிருபமா ராவ் புறப்பட்டுச் செல்வார்.

ராவல்பிண்டி வந்தார் நிருபமா ராவ்: முன்னதாக புதன்கிழமை ராவல்பிண்டியிலுள்ள ராணுவ விமானப்படை தளத்துக்கு சிறப்பு விமானத்தில் நிருபமா ராவ் வந்திறங்கினார். புதன்கிழமை இரவு வெளியுறவு செயலர் சல்மான் பஷீர் அளித்த விருந்தில் நிருபமா ராவ் கலந்துகொண்டார்.

ஜூன் 25-ல் பாகிஸ்தான் வருகிறார் சிதம்பரம்: சார்க் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜூன் 25-ம் தேதி இஸ்லாமாபாத் வருகிறார். அப்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கை, சிதம்பரம் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது. 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com