ஊழலை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க இதுவே "ரைட் டைம்' - பிரதமர் பேச்சு

"பொது வாழ்வில் நிலவும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்; அரசு நிர்வாக நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க இதுவே சரியான நேரம்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

மாநில கவர்னர்களின் இரண்டு நாள் மாநாடு டில்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நேற்று பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:நாட்டின் விரைவான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக, நாம் எடுக்கும் முயற்சிகள் எல்லாம், முழு அளவில் பலன் தர வேண்டுமெனில், பொது வாழ்வில் நிலவும் ஊழலை நாம் ஒழிக்க வேண்டும்; அரசு நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும். ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க இதுவே சரியான நேரம் என, நம்புகிறேன்.பொது அமைப்புகளின் செயல்பாட்டில், ஒளிவுமறைவற்ற தன்மையையும், பொறுப்புடைமையையும் மேம்படுத்த, எனது அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதோடு, மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதும் உறுதி செய்யப்படும்.

இதன் ஒரு பகுதியாக, லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும். கொள்முதல் முறைகளில், பகிரங்க தன்மையை மேம்படுத்தவும், பொறுப்புடைமையை அதிகரிக்கவும், சட்டம் இயற்றவும் எனது அரசு தீர்மானித்துள்ளது. லோக்பால் மசோதா மட்டுமின்றி, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்துவது தொடர்பான மசோதாவும் பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்படும். மத்திய அரசைப் போல, மாநில அரசுகளும் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உணவு பணவீக்கம் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசும், ரிசர்வ் வங்கியும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரத்தில், உயரிய வளர்ச்சி வீதத்தை தொடர்ந்து பேணிக் காப்பது எப்படி என்பது தான் தற்போதைய சவால்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com