எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை - காம்பிர்

ஆஸ்திரேலிய தொடரில், ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டோம்,'' என, இந்திய அணி துவக்க வீரர் காம்பிர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 0-3 என இழந்தது. இது குறித்து காம்பிர் கூறியது: தரவரிசையில் "நம்பர்-1' இடத்தை பிடிக்க வேண்டும் என்றால், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அன்னிய மண்ணிலும் வெற்றி பெற வேண்டும். இதற்கு பேட்டிங் மிக முக்கியம். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 

டெஸ்ட் தொடரை வெல்வது தான் மகிழ்ச்சி தரும். இது சச்சின் 100வது சதம் அடிக்கும் போது ஏற்படும் உற்சாகத்தை விட, அதிக மகிழ்ச்சியை அளிக்கும். சச்சின் 100வது சதம் அடித்து, அணி வெற்றி பெறவில்லை என்றால் அது திருப்தியாக இருக்காது. ஒட்டுமொத்தத்தில் தனிநபரின் சாதனையை விட, தொடரின் வெற்றியே முக்கியம்.

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா திரும்பும் போது இதற்கான விளைவுகளை சந்திக்கத் தயாராக உள்ளோம். தற்போது, எங்களை விமர்சிக்க அவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளோம். மொத்தத்தில் இங்கு சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தவில்லை.

விளையாடும் 11 வீரர்கள் தான் களத்தில் திறமை வெளிப்படுத்த வேண்டும். கேப்டனாக இருப்பவர் எந்த விளைவையும் ஏற்படுத்தி விடப் போவதில்லை. இதற்காக கேப்டன் தோனியை மட்டுமல்ல, வேறெந்த தனிப்பட்ட வீரரையும் குற்றம் சுமத்த முடியாது. இதே தான் சேவக்கிற்கும். வெற்றி இவரை மட்டும் சார்ந்திருக்காது. ஒட்டுமொத்த அணியும் நன்றாக விளையாட வேண்டும்.

அணியின் வெற்றிக்கு சிறந்த துவக்கம் தேவை. புதிய பந்தில் இவர்கள் கொடுக்கும் துவக்கம் தான், மற்ற வீரர்களின் பேட்டிங்கிற்கு உதவியாக அமையும். கடந்த போட்டிகளில் துவக்கம் சரியில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேநேரம், துவக்கம் மற்றும் "மிடில் ஆர்டர்' வீரர்களை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. ஒட்டுமொத்த வீரர்களும் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். 

பொதுவாக ஆஸ்திரேலிய தொடர் சவாலானது. இத்தொடரில் இன்னும் நிறைய போட்டிகள் மீதமுள்ளன. அடுத்து அடிலெய்டில் சிறப்பாக செயல்பட்டால், பின் "டுவென்டி-20', ஒருநாள் தொடரில் சாதிக்க உதவிகரமாக அமையும். இந்திய ரசிகர்களின் முகத்தில் எப்படியும் புன்னகையை கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக அடிலெய்டில் வெற்றி பெற முயற்சிப்போம். 

இவ்வாறு காம்பிர் கூறினார்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com