ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 50 கோடி - முதல்வர் கருணாநிதி

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக |50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். 64-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றிய பிறகு முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை: சுதந்திரம் என்பது தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்கு மட்டும் பயன்படுவதல்ல. நமது நாட்டு மக்கள் நல்வாழ்வு பெறத்தக்க வகையில் திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

அவற்றை முறையாகச் செயல்படுத்தி, அரசியல், கல்வி, சமூகப் பொருளாதார நிலைகளில் எல்லோரும் உயரும் வகையில் கடமை உணர்வோடும் விழிப்போடும் செயல்பட வேண்டியது சுதந்திர அரசின் தலையாய கடமையாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டை "உலக இளைஞர்கள் ஆண்டு' என அறிவித்துள்ளது. இதையொட்டி, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக புதிய திட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள், பொறியியல், இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இளைஞர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி பெற்ற இளைஞர்கள் தொழில் நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்புகளைப் பெற இந்தத் திட்டம் வழிவகுக்கும். நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முதல் கட்டமாக |50 கோடி ஒதுக்கீடு செய்ய அரசாணை வெளியிடப்படுகிறது.

சாலைகளை சீரமைக்க |1000 கோடி:  தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 465 கோடி மதிப்பிலான சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சாலைகளை நேர்த்தியான முறையில் சீரமைத்திட, இந்த ஆண்டில் சிறப்பு நிதியாக |1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார்: தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பல விவசாய பம்பு செட்டுகள் திறன் குறைந்தவையாக உள்ளதால் மின்சாரம் அதிகமாகச் செலவாகிறது. தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறைக்கு இதுவும் ஓரளவுக்குக் காரணமாகும்.

இத்தகைய பம்பு செட்டுகளுக்குப் பதில், திறன்மிக்க புதிய பம்பு செட்டுகளைப் பொருத்துவதன் மூலம் 20 சதவீத மின்சாரத்தைச் சேமித்திட முடியும். சிறு, குறு விவாசாயிகளின் பம்பு செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களை நீக்கிவிட்டு, புதிய மின் மோட்டார்கள் அரசின் சார்பில் இலவசமாகப் பொருத்தித் தரப்படும். மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் புதிய மோட்டார்கள் பொருத்தித் தரப்படும்.

அடிப்படை வசதிகள்: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்து 104 கிராம ஊராட்சிகளில் |2 ஆயிரம் கோடி செலவில் அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மறைந்த அன்னை தெரசாவின் நூற்றாண்டு 2010 ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்குகிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

தமிழகம் வளம்பெற்று மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மெய்வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், பசி நோக்காமல் உழைத்து வருகிறோம். சிலரால் அள்ளி வீசப்படும் அவதூறுக் கணைகளை அலட்சியப்படுத்தி, ஆக்கப்பூர்வமான பணிகளால் ஒவ்வொரு நொடியும் தமிழக மக்களுக்குப் பயன்தர வேண்டும் என்ற எண்ணத்தோடு பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார் முதல்வர் கருணாநிதி. 

Tags

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com