கனிமொழிக்கு இன்னும் 21 நாட்கள் சிறை தான்?
டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், டில்லி ஐகோர்ட்டாவது, தனக்கு ஜாமின் வழங்கும் என்ற கனிமொழியின் எதிர்பார்ப்பு நேற்று நிறைவேறவில்லை. அவரது ஜாமின் மனுவை, 15 நிமிடங்களில் விசாரித்துமுடித்த டில்லி ஐகோர்ட், மனு மீதான விசாரணையை, அடுத்த மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கிடையில், சிறையில் இருப்பதால், உருவாகும் டென்ஷன் குறைக்க தியான பயிற்சி மேற்கொள்கிறார் கனிமொழி.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி, பல மாதங்களாக சிறையில் இருக்கும் கனிமொழிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் ஜாமின் கோரி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, கடந்த 3ம் தேதி நிராகரிக்கப்பட்டது. "கனிமொழிக்கு ஜாமின் தர முடியாது' என, நீதிபதி ஷைனி கூறியதோடு மட்டுமின்றி, கடுமையான கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி சார்பில், கடந்த சனிக் கிழமை, ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு டில்லி ஐகோர்ட்டின், 35வது எண் கோர்ட்டில், நீதிபதி ஏ.கே.ஷாலி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கனிமொழி சார்பில், வழக்கறிஞர் அல்தாப் ஆஜராகி வாதாடினார். அப்போது, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மறுக்கப்பட்டதற்கான காரணங்களுக்கு எதிர்வாதம் செய்து, தன் கருத்துக்களை முன்வைத்தார்.
சுப்ரீம் கோர்ட்டே சொல்கிறது: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி மிகவும் தீவிரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்றும், நாட்டின் பொருளாதாரம் சீர்கேடு அடையும் அளவுக்கு, குற்றங்கள் புரிந்ததாக கூறப்படுவதையும் ஏற்க இயலாது. இந்த காரணங்களைக் கூறி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் ஜாமின் மறுத்துள்ளது. அதற்கு முன்பாகவே, கனிமொழி சார்பில், சுப்ரீம் கோர்ட்டை அணுகிய போது, அங்கு அளிக்கப்பட்ட உத்தரவில், பல முக்கிய அம்சங்கள் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின், ஜாமின் குறித்து பரிசீலனை செய்யலாம் என, சுப்ரீம் கோர்ட் கூறியது. தவிர, குற்றவியல் சட்டம் பிரிவு, 437ன் படி, கனிமொழிக்கு பெண் என்ற அடிப்படையில் ஜாமின் கேட்பதும் பொருந்தும் என்றும் தெரிவித்தது.
சி.பி.ஐ.,க்கும் ஓகே: கனிமொழி ஜாமின் கோரிய சிறப்பு கோர்ட்டிலும் கூட, எதிர்தரப்பான சி.பி.ஐ., தனக்கு ஆட்சேபனை இல்லை எனக் கூறியது. கனிமொழி மீது வழக்கு தொடர்ந்துள்ள, சி.பி.ஐ.,யே கூட, அவருக்கு ஜாமின் வழங்குவதை எதிர்க்கவில்லை எனும்போது, அதையும் மீறி அவருக்கு ஜாமின் மறுப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. தவிர, இந்த வழக்கில் கனிமொழி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டாலுமே கூட, அவருக்கு அதிகபட்சம், ஐந்து ஆண்டுகள் வரை மட்டுமே சிறை தண்டனை வழங்கமுடியும். அவர் மீதான குற்றத்தின் அளவே அவ்வளவு தான் என, சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதன் முறையாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம்பெறவே இல்லை. முக்கிய குற்றப்பத்திரிகையான அதில் இடம்பெறாத, கனிமொழியை தீவிர குற்றமிழைத்தவராக கருதிவிடமுடியாது.
சம்பந்தமே இல்லை: ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டில், கனிமொழி எந்தவகையிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பலனடையவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் லைசென்ஸ் அளித்தது என, எந்த வகையிலும் கனிமொழிக்கு சம்பந்தமே இல்லை. எனவே அவர் எந்த ஆதாயத்தையும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடைந்திருக்கவே முடியாது. கனிமொழி மீதான குற்றச்சாட்டு என்பது, அவர் ராஜாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது மட்டுமே. கனிமொழியும், ராஜாவும் அரசியலில் இருப்பவர்கள்; அதுவும் ஒரே கட்சியில் இருப்பர்கள். அவர்கள் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வதும், சந்தித்துக் கொள்வதும் மிகவும் சாதாரண விஷயம். இதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. கனிமொழிக்கு ஜாமின் அளித்தால், சாட்சிகளை கலைக்கமாட்டார். கலைஞர், "டிவி'க்கும், அவருக்கும் தொடர்பு ஏதும் இல்லை. அந்த, "டிவி'யுடன் அவருக்கு இருந்த தொடர்பு எல்லாமே, வெறும், 15 நாட்கள் மட்டுமே. எனவே, கனிமொழிக்கு ஜாமின் வழங்க வேண்டும் என, வழக்கறிஞர் அல்தாப் வாதாடினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை, டிச., 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஷாலி அறிவித்தார். மேலும், கனிமொழியின் ஜாமின் கோரிக்கை மீது, சி.பி.ஐ.,யும் தன் நிலைப்பாட்டை தெரிவிக்க முன் வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், சிறையில் இருக்கும் கனிமொழி, டென்ஷன் குறைப்பதற்காக தியான பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டு வருகிறார். அரசு சார்பற்ற அமைப்பான திவ்ய ஜோதி ஜாக்ரதி சன்ஸ்தன் அமைப்பு, திகார் சிறை வளாகத்தில், தியான வகுப்புகளை நடத்துகிறது. அதில் சேர்ந்துதான் கனிமொழி தியான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? வழக்கு விசாரணையின் போது, சி.பி.ஐ.,யின் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரனும் இருந்தார். அவரை பார்த்து நீதிபதி ஷாலி, "சி.பி.ஐ., தரப்பில் நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? இதில் உங்களது கருத்துக்கள் என்ன என்றார். அதற்கு பதிலளித்த மோகன் பராசரன், ""பாட்டியாலா கோர்ட்டில், இவ்வழக்கை மேற்கொண்டு வரும் எங்களது வழக்கறிஞர் லலித் தெரிவித்த கருத்து தான் என்னுடைய கருத்தும்' என்று மட்டும் கூறினார்.நேற்றைய விசாரணையின் போது, தி.மு.க., சார்பில் அக்கட்சியின் மூத்த எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு மற்றும் விஜயன் மட்டுமே கோர்ட்டிற்கு வந்திருந்தனர்.

