கல்வித்துறை சீரழிந்து வருகிறது - ஜெயலலிதா அறிக்கை

கல்வித்துறை சீரழிந்து வருகிறது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கல்வி துறை முற்றிலும் சீரழிந்து வருகிறது. ஆசிரியர் பணிமாற்றம், ஆசிரியர் நியமனம் என அனைத்திலும் ஊழல். ஆசிரியர் பணிமாற்றம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இதே போன்று, ஆசிரியர் தேர்விலும் ஊழல் மலிந்துவிட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, தேர்வு வாரியம் சுயமாக செயல்படவில்லை என்பதும், இந்த வாரியத்தை ஆளுகிறவர்களுக்கு நெருக்கமானவர்கள் இயக்குகிறார்கள் என்பதும் தெளிவாகிறது.  உதாரணமாக, கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பலர், ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

பொதுவாக ஒரு முறை ஒருவர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டால், அவருடைய பெயரை எப்படி மறுபடியும் வேலை வாய்ப்பு அலுவலகம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பரிந்துரை செய்ய முடியும்? ஒருவரை எப்படி இரு முறை தேர்வு செய்ய முடியும்? ஒருவருக்கு எப்படி இரண்டு வேலை அளிக்க முடியும்? ஆவணங்களின் அடிப்படையில், ஒரு பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்டவரை பணியமர்த்திவிட்டு, மற்றொரு இடத்திற்கு அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானவர் பணியமர்த்தப்படுவாரோ என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

முதுநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலிலும் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது. வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறாத பலர் முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பதிவு மூப்பு தேதி மாறுபட்டு இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போன்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 283 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக ஒரு இடத்திற்கு ஐந்து பேர் என்ற வீதத்தில், 1,415 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், 256 பேர் தான் தேர்வு செய்யப்பட்டனர்.  மீதமுள்ள 27 பணியிடங்களுக்கு யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதே போன்று, கடந்த மே மாதம் 206 தமிழாசிரியர் பணியிடங்களுக்காக 1,030 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.  ஆனால் 196 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.  மீதமுள்ள பத்து பணியிடங்களில் யார் நியமிக்கப்பட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இது போன்ற கேள்விகள் எல்லாம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுப்பப்பட்டுவிட்டன.  பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கிறது.

இது மட்டுமல்லாமல், போலிகளின் வரிசையில், போலி மதிப்பெண் சான்றிதழ் வேறு சேர்ந்துவிட்டது.  போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இதன் விளைவாக கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவரை பார்வையாளர்கள் என்ற போர்வையில் சில மர்ம நபர்கள் சந்தித்து உண்மையைச் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்த மர்ம நபர்கள் யார் என்ற விவரத்தை காவல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

எனவே, இந்த வழக்கை திசை திருப்பும் விதமாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தைத் தணிக்கும் விதமாகவும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று பொறியியல் கவுன்சிலிங்கை பார்வையிட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com