காமராஜரின் பாதையில் பயணிப்போம் - பாஜக
ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான அரசை தமிழகத்துக்கு தந்த காமராஜரின் பாதையில் பாஜக பயணிக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி முக்கியம் என்பதை 60 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர் காமராஜர். ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்கியவர். பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களிடம் எவ்வித பாகுபாடும் கூடாது என்பதற்காக சீருடையும், இலவச ஆடைகளையும் வழங்கினார். அதற்குப் பிறகும் மாணவர்களின் வருகை குறைந்ததால் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் கல்வியில் தமிழகம் முதல் நிலை மாநிலமாக மாறியது.
அணைகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள் என்று காமராஜர் ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறியது. அந்த மாபெரும் தலைவரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவது பாராட்டுக்குரியது. கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாளில் எவ்வித பாகுபாடும் இன்றி இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.
தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்த, ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான ஆட்சியை தமிழகத்துக்கு வழங்கிய காமராஜரின் பாதையில் பாஜக பயணிக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

