குஜராத் சென்றார் அத்வானி - எல்லையில் வரவேற்றார் மோடி

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை, நேற்று குஜராத் மாநிலம் சென்றடைந்தது. அவரை மாநில எல்லையில், முதல்வர் நரேந்திர மோடி வரவேற்றார். ஊழலுக்கு எதிராக அத்வானி மேற்கொண்டுள்ள ரத யாத்திரை நேற்று முன்தினம், டையூ- டாமன் யூனியன் பிரதேசம் சென்றடைந்தது.அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், "அன்னிய நாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், 21ம் நூற்றாண்டு இந்தியாவினுடையதாக இருக்கும். ஊழல் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரத யாத்திரை மேற்கொண்டுள்ளேன்,'' என தெரிவித்தார்.

இந்நிலையில், அத்வானியின் ரத யாத்திரை, நேற்று குஜராத் சென்றடைந்தது. குஜராத்-டையூ டாமன் எல்லையில், வாபி என்ற இடத்தில் அத்வானியை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரவேற்றார்.

குஜராத் மாநிலத்தில் நுழைந்த பின், அங்கு நிருபர்களிடம் பேசிய அத்வானி கூறியதாவது: இந்தியாவில், பார்லிமென்டரி ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்ட போது, வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட உலகத் தலைவர்கள் பலரும், நம்மை விமர்சித்தனர். ஆனால், அதன் பின், இந்தியா உண்மையான ஜனநாயக நாடு என்பது நிரூபணமானது. மத்தியில் ஆட்சியில் உள்ள, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடக்கும் ஊழல்களால், நாட்டிற்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பார்லிமென்டரி ஜனநாயகத்தை கடைபிடிக்கும் நம் நாட்டிற்கு, இந்த அவமானத்தைத் தேடித்தந்துள்ளனர்.

மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இல்லாத போது, அவரை நான் மிகவும் மதித்தேன். திறமையான, நம்பகமான நபர் எனக் கருதினேன். ஆனால், கடந்த 2008ம் ஆண்டில், பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அரசை காப்பாற்ற எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்ததால், யாரும் அவரை மன்னிக்க மாட்டார்கள்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நல்லாட்சி தருகிறார். மாநிலத்தை ஊழல் இல்லாத மாநிலமாக்கியுள்ளார். நாட்டில் நல்ல நிர்வாகமும், சுயராஜ்யமும் உள்ள ஒரே மாநிலம் குஜராத் மட்டுமே. நரேந்திர மோடியின் தலைமையால் தான் இது சாத்தியமானது.

அன்னிய நாடுகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள 25 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், இந்திய கிராமம் ஒவ்வொன்றின் மேம்பாட்டிற்கும் 4 கோடி ரூபாய் கிடைக்கும்.இவ்வாறு அத்வானி கூறினார்.அத்வானி ரத யாத்திரை துவக்கும் முன்னர், அவரது யாத்திரைக்கு குஜராத் முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பதாக, செய்திகள் வெளியாகின. அவற்றை பொய்யாக்கும் வகையில், நேற்று மாநில எல்லையில், அத்வானியை மோடி வரவேற்றார். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com