கேரளாவில் பந்த், தமிழக பேருந்துகள் நிறுத்தம்
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரளாவில் இன்று பந்த் நடப்பதால் நெல்லையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக தமிழகம் மற்றும் கேரள எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து கேரளாவில் இன்று பந்த் நடக்கிறது. இதனால் கேரளா செல்லும் பேருந்து மற்றும் வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பி்ல் நெல்லையிலிருந்து கொட்டாரக்கரைக்கு இயக்கப்படும் பேருந்து நேற்று மாலை நிறுத்தப்பட்டுள்ளது. இது போல் இன்று காலை முதல் கொட்டாரக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் இருந்து கொல்லம், ஆழப்புழை, எர்ணாகுளம் போன்ற நெடுந்தூர பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளும் பந்த் நடப்பதை முன்னிட்டு நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டன. இது தவிர செங்கோட்டை பணிமனையில் இருந்து கேரளா செல்லும் விரைவுப் பேருந்துகளும் நேற்று மாலை முதல் இயக்கப்படவில்லை. இன்று மாலை பந்த் முடிந்த பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப விரைவுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக விரைவுப் போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

