கொடிநாள் வசூலில் அதிகம் வசூலித்த மாவட்டங்களுக்கு சுழற்கேடயம்
கடந்த ஆண்டு கொடி நாள் வசூலில் இலக்கை தாண்டி வசூலித்த மாவட்டங்களுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா சுழற்கேடயங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் பர்னாலா கிண்டி, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை விருந்து அளித்தார்.
நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு கொடி நாள் வசூலில் இலக்கைத் தாண்டி மிக அதிக அளவில் வசூலித்த மாவட்டங்களுக்கு கேடயங்களை வழங்கினார். கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்துக்கு |14 லட்சத்து 33 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும், இலக்கைவிட 373 சதவீதம் அதிகமாக, அதாவது |53 லட்சத்து 47 ஆயிரம் வசூலித்த விழுப்புரம் மாவட்டத்துக்கு முதல் நிலை சிறப்பு வசூல் கேடயம் வழங்கப்பட்டது. அதனை அந்த மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி பெற்றுக் கொண்டார்.
அதேபோல் இரண்டாம் நிலை சிறப்பு வசூல் கேடயம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சி. முனியநாதனுக்கு வழங்கப்பட்டது. |1 கோடியே 35 லட்சம் வசூலித்த சென்னை மாவட்டத்துக்கு அதிகபட்ச வசூலுக்கான சிறப்பு கேடயம் வழங்கப்பட்டது. அதனை மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சென்னை மாவட்டம் இந்த கேடயத்தைப் பெற்று வருகிறது.
அதேபோல் திருச்சி மாநகராட்சி ஆணையர் டி.டி. பாலசாமி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே. மிஸ்ரா, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் எம். ஜெயராமன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பி. பிரகாஷ் ஆகியோரும் சுழற்கேடயங்களைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, முன்னாள் ஆளுநர்கள் எம்.எம். ராஜேந்திரன் (ஒரிசா), கோபாலகிருஷ்ண காந்தி (மேற்கு வங்கம்), சட்டப்பேரவைத் தலைவர் ஆர். ஆவுடையப்பன், மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

