சபரிமலையை புறக்கணிக்க சீமான் கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை மையப்படுத்தி கேரளாவிற்கு சென்ற தமிழக ஐயப்ப பக்தர் மீது வெந்நீர் ஊற்றியது கொடூரமானது. எனவே தமிழக பக்தர்கள் சபரிமலையை புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித் தாக்கியதால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் வேதனையளிக்கிறது.

முதல் முறையாக சபரிமலைக்குச் சென்ற சாந்தவேலு, அங்கிருந்த தேநீர் கடைக்காரருக்கும் தனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் விளைவாகவே கடைக்காரர் உள்ளிட்ட சிலர் தன்னைத் தாக்கினார்கள் என்பதையும், அப்போது கடைக்காரர் கொதிக்கும் வென்னீரை தன் மீது ஊற்றியதாகவும் கோட்டயம் மருத்துவமனையில் தன்னை வந்த பார்த்த மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

மகரசோதியை முன்னிட்டு சபரிமலைக்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பம்பையில் குவிந்துக் கொண்டிருந்த நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசும், அதன் முதலமைச்சர் உம்மண் சாண்டியும் கூறிய நிலையில், அங்கு காவலர்கள் யாரும் வந்து தகராறைத் தடுக்காத்தும், அந்தச் சம்பவம் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாததும் ஏன்?.

ஐயப்ப பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மண் சாண்டி அளித்த உறுதிமொழி வெற்று வார்த்தைகள் என்பது நிரூபணமாகியுள்ளது. சாந்தவேலுவை தன்னோடு அழைத்துச் சென்ற சந்திரகுருசாமி தன் குழுவினருடன், தகராறு நடந்தபோது அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளதாக அவரது மனைவி தமிழக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் மீது தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி முழுமையான புலனாய்வு செய்து, சந்தவேலுவைக் கொன்ற மலையாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

கோயில்கள் நிறைந்த நம் தமிழ்நாட்டில் எல்லா கடவுள்களுக்கும் ஆலயங்கள் உள்ளதே. தமிழ்க் கடவுளாம் முருகனின் ஆறுபடை வீடுகளைத் தாண்டி புனிதத் தலம் வேறு என்ன வேண்டும்?. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தமிழர்கள் அங்கு சென்று வருவதால்தான் இன்றைக்கு ஒரு ஐயப்ப பக்தர் இப்படி கொடூரமான கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்குச் செல்வதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார் சீமான். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com