சமூக நீதியைப் பாதுகாக்கும் அரசு திமுக - முதல்வர் கருணாநிதி
சமூக நீதியைப் பாதுகாக்கும் அரசாக திமுக திகழ்கிறது என்று முதல்வர் கருணாநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இடஒதுக்கீடு பற்றி 1994-ல் அகில இந்திய தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதினேன். அதற்குப் பின், 1996-ல் நான்காவது முறையாகத் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சட்டப் பேரவையில் இந்தப் பிரச்னை குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நான், ""69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது என்றால் நாடாளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட வாக்குகள் தேவை. அது இப்போது முடியுமா? என்பது பிரச்னையாக இருக்கிறது. இருந்தாலும் அந்த முயற்சியிலே இந்த அரசு ஈடுபடும்'' என்று கூறினேன்.
இதைத் தொடர்ந்து, 1997-ல் அன்றைய பிரதமராக இருந்த தேவகௌடாவுக்கு கடிதம் எழுதினேன். அதில், ""இடஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தி இருந்தேன். இதன்பின், 2006-ல் 5-வது முறையாக முதல்வராக அமர்ந்தேன். அந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினேன். இந்தக் கடிதத்துக்கு முன்பே 2006 அக்டோபரில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஐந்து பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதினேன்.
இன்னும் சொல்லப் போனால், தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் வைக்கப்படும் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடஒதுக்கீடு குறித்தும், சமூக நீதி பற்றியும் சொல்லாமல் விட்டதே கிடையாது. இவ்வாறு தொடர்ந்து சமூக நீதிக்காக, இடஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்து வந்ததின் பயனாக இப்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. எத்தனையோ ஆண்டுகளாக இடஒதுக்கீட்டுப் பிரச்னைக்காக உண்மையிலேயே பாடுபட்டு வரும் நமக்கு தேன் துளிகள் தேனருவியாகப் பெருகிட வேண்டும் என்ற ஆவல் ததும்புகிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூக நீதி கொள்கையை தொய்வில்லாமல் திமுக பாதுகாத்து வருகிறது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் சமூக நீதியைப் பலமாகப் பாதுகாத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோரான வன்னியப் பெருமக்களும், சீர்மரபினர்களும் மற்றும் சில வகுப்பினரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலில் இணைக்கப்பட்டனர். அவர்கள் 20 விழுக்காடு எனப் பயன் பெறவும் வழி வகுத்தது.
பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக இஸ்லாமியப் பெருமக்கள் 3.5 விழுக்காடு பெறவும், தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக அருந்ததிய மக்கள் 3 விழுக்காடு பெறவும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் பழங்குடியின மக்களும் ஒட்டுமொத்தமாக 18 விழுக்காடு பெற்றிருந்தது மாற்றி அமைக்கப்பட்டது. பழங்குடியின மக்களுக்கு தனியாக ஒரு விழுக்காடு என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு என்றும் மாற்றியமைக்கப்பட்டது. இது, சமூக நீதியில் திமுகவுக்கு உள்ள அக்கறைக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

