சுரேஷ்ராஜன் இரும்பு ஆலையில் மீண்டும் சோதனை
முன்னாள் அமைச்சரும், குமரி மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ் ராஜனுக்கு சொந்தமான இரும்பு ஆலை நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ளது. இங்கு கடந்த 18 மற்றும் 19-ந் தேதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசாரும், பொதுப்பணித்துறை கட்டிடப்பிரிவு செயற்பொறியாளர் ஆசைத்தம்பி தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினரும் சோதனை மேற்கொண்டனர்.
ஆலையில் கட்டப்பட்ட கட்டிடங்களின் மதிப்பு, நிலத்தின் பரப்பளவு உள்பட பல்வேறு பிரிவுகளில் சோதனை நடந்தது. மீண்டும் இன்று போலீசாரும், அதிகாரிகளும் இரும்பு ஆலையில் சோதனை மேற்கொண்டனர்.
காலையில் தொடங்கிய சோதனை இன்று பிற்பகல் வரை நீடித்தது. ஏற்கனவே சுரேஷ் ராஜன் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையின் தொடர்ச்சியாக இரும்பு ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடத்தப்படும் சோதனையில் கிடைக்கும் ஆதாரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

