சோராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு குஜராத் அமைச்சருக்கு சிபிஐ சம்மன்

சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குஜராத் மாநில உள்துறை இணையமைச்சர் அமீத் ஷாவுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. அமீத் ஷா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அமீத் ஷா பங்கேற்கவில்லை. அமைச்சர் ஒருவருக்கு போலி என்கவுன்ட்டர் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இந்த சம்மன் ஆமதாபாதில் உள்ள அமைச்சர் வீட்டின் கதவில் ஒட்டப்பட்டுள்ளது. அமைச்சர் எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை.

"சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக வியாழக்கிழமை மதியம் 1 மணிக்குள் காந்திநகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமென்று அமீத் ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அமைச்சர் ஆஜராகவில்லை; இதனையடுத்து வெள்ளிக்கிழமை மதியத்துக்குள் அவர் நேரில் ஆஜராக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என்று சிபிஐ ஐ.ஜி பி.கந்தசாமி தெரிவித்தார்.

இதில் ஆஜராகத் தவறினால் மூன்றாவது மற்றும் இறுதி சம்மன் அனுப்பப்படலாம். அல்லது தலைமறைவாகிவிட்டதாக அறிவித்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்படலாம். வழக்கு விவரம்: ஆமதாபாத் அருகே பயங்கரவாதி என்று கூறி சோராபுதீன் ஷேக் என்பவரை  போலீஸôர் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். 2005-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது.

ஆனால் வேண்டுமென்றே போலியாக என்கவுன்ட்டர் நடத்தி சோராபுதீனை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சோராபுதீன், கிரானைட் வியாபாரிகள் சிலரை மிரட்டி பணம் கேட்டதாகவும், இதனால் உள்துறை இணையமைச்சர் அமீத் ஷா, என்கவுன்ட்டர் நடத்தி அவரை கொல்ல போலீஸôருக்கு உத்தரவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநில சிஐடி போலீஸôர் வழக்கை விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சியாக இருந்த அவரது மனைவியும் 2010 ஜனவரியில் கொல்லப்பட்டார்.

என்கவுன்ட்டர் நடத்திய 4 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 10 போலீஸôரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த என்கவுன்ட்டர் தொடர்பான அமைச்சரின் தொலைபேசி உரையாடல்களை சிபிஐ பதிவு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.  இதனால் அமைச்சர் அமீத் ஷாவை சிபிஐ விரைவில் கைது செய்யும் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நேரில் வந்து தங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அமைச்சர் அமீத் ஷாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

யார் இந்த அமீத் ஷா: குஜராத்தில் 2002-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்தபோது மோடியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று எம்.எல்.ஏ. ஆனவர் அமீத் ஷா. சார்கஜ் தொகுதியில் 1.58 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வென்றார். தொடர்ந்து 4 முறை அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள அவர், 2007 தேர்தலில் 2.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமைச்சரவையில் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக இருந்தார். மோடி, தேசிய அரசியலுக்குச் சென்றால் அமீத் ஷாவை முதல்வராக்கும் திட்டமும் மாநில பாஜகவிடம் இருந்தது.

தற்போது 45 வயதாகும் அமீத் ஷா, போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிக்கும் வரை மாநில அரசியலில் தொடர்ந்து தனது செல்வாக்கை வளர்த்து வந்தார். மோடியுடன் நெருக்கமாக இருந்த அதே நேரத்தில் அமைச்சரவை சகாக்களுடன் அவர் நெருங்கிப் பழகுவது இல்லை என்று மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொலை குற்றச்சாட்டில் சிபிஐ-யால் சம்மன் அனுப்பப்பட்டுள்ள அமீத் ஷா உடனடியாக பதவி விலக வேண்டுமென்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, தில்லியில் வியாழக்கிழமை கூறியது: குஜராத்தில் மிக மோசமான அரசியல் நடைபெற்று வருகிறது. வேண்டாதவர்களைச் சுட்டுக் கொல்ல அமைச்சர் போலீஸôருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இதுவே உதாரணம் என்றார். இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி குஜராத்தில் பாஜகவுக்கு உள்ள செல்வாக்கை சரியச் செய்துவிடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. ஆனால் அவர்கள் எண்ணம் ஒருபோதும் நடக்காது. பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், மக்கள் ஆதரவுடன் நரேந்திர மோடி மீண்டும் குஜராத் முதல்வராக தேர்வாகி, தனது ஆட்சி மீது கூறப்பட்டவை தவறான குற்றச்சாட்டுகள் என்பதை நிரூபித்தார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எதிராக மத்தியில் ஆட்சிபுரியும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, சிபிஐ அமைப்பை பயன்படுத்துகிறது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நாராயண் வியாஸ் கூறியுள்ளார்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com