ஜனநாயகத்தை காப்பாற்றுவதே கட்சியின் முக்கிய நோக்கம் - பாரிவேந்தர் பேச்சு
ஜனநாயகத்தை காப்பாற்றுவதே கட்சியின் முக்கிய நோக்கம் என்றார் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர்-தலைவர் பாரிவேந்தர். பாளையங்கோட்டையில் இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் ஜி. ராஜன் தலைமை வகித்தார்.
கட்சியின் கொள்கைகள் குறித்து அதன் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் மேலும் பேசியது: தமிழகத்தில் ஏற்கெனவே 57 கட்சிகள் உள்ளன. 58-வது கட்சியாக இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வளவு கட்சிகள் இருந்தபோதும் நாட்டின் பிரச்னைகள் தீர வில்லை. இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. அதனால்தான் இளைஞர்கள் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சி தொடங்கப்பட்டது.
நாட்டில் ஜனநாயகம் இல்லை. அரசியலில் இருப்பவர்களும் ஜனநாயகத்தை மதிக்க வில்லை. ஆட்சிக்கு வந்தவர்களும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்காக எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்ய சென்றபோது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர்.
தேர்தல் முறையாக நடக்கவில்லை. இவ்விதமான முறைகேடுகளுக்கு முடிவுகட்டவே நாங்கள் கட்சியைத் தொடங்கி உள்ளோம். அரசியலை தூய்மைப்படுத்துவது எங்கள் கட்சியின் பிரதான கொள்கை. அடுத்து அனைவருக்கும் உயர்தரக் கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல், மேம்பட்ட மருத்துவ வசதி,, விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை, விவசாயத்தில் விஞ்ஞானத்தை புகுத்துதல், பெண்களுக்கு சமஉரிமை, உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களில் 50 சதம் பெண்களுக்கு ஒதுக்குவது உள்ளிட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.
கட்சியின் தலைவர் கோவைத்தம்பி, அகில இந்திய இளைஞரணி செயலர் எஸ். மதன், அமைப்புச் செயலர் வி. வெங்கடேசன், தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளர் டி. ஜெயக்குமார், செயலர் ஏ.ஆர். ரங்கபாஷ்யம், கொள்கை பரப்பு செயலர் பி. நடராஜன், வழக்கறிஞர் அணி செயலர் டி. சிவசங்கரன், பி. பாலகுருநாதன், மூ. .மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாரிவேந்தருக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

