தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு தர தயங்குகிறார் ராஜபக்ஷே
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும், 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதில், தனது அரசு விருப்பம் கொண்டிருப்பதாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளார். எனினும், அதற்கான கால வரையறை குறித்து, அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கையில், மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நான்கு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தில், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு, அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தை பற்றி, அவர் நேற்று அதிபர் ராஜபக்ஷேவிடம் விவாதித்தார். இலங்கை உடனான இந்திய உறவுகள் குறித்து பேசிய அவர், தமிழர் விவகாரத்தில், விரைவான, உருப்படியான தீர்வை, இந்தியா எதிர்பார்ப்பதாக வலியுறுத்தினார். இதையடுத்து, ஏற்கனவே ஏற்கப்பட்ட, ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட, 13வது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதில், தனது அரசு விருப்பத்துடன் இருப்பதாக, ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இது, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வைத் தர வழிவகுக்கும் முக்கிய திட்டம் ஆகும்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் பேசிய பின், கிருஷ்ணா அளித்த பேட்டி: இவ்விவகாரம் குறித்து, அதிபரிடம் நான் பேசினேன். 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதில், அரசு விருப்பத்துடன் இருப்பதை, அவர் தெரிவித்தார். அதேநேரம், இலங்கை அரசு, தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.,) இடையேயான பேச்சுவார்த்தையில் விரைவான, உருப்படியான அணுகுமுறையை, இந்தியா எதிர்பார்க்கிறது என்பதையும், அவரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
ஏனெனில், அந்த அமைப்புடன் பேசுவதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலும். எனினும், 13வது சட்டத் திருத்த அமலுக்கு, குறிப்பிட்ட கால வரையறை எதையும், அதிபர் தன் பேச்சில் குறிப்பிடவில்லை. அதே சமயம், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து, கமிஷன் அளித்த தீர்வுகளை அரசு அமல்படுத்தும் பட்சத்தில், அது இலங்கையின் தேசிய வாழ்வில் நல்லிணக்கம் ஏற்பட உதவும். இந்த வாய்ப்பை, இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்தார்.
டி.என்.ஏ., உடனான பேச்சுவார்த்தையை, இலங்கை அரசு நிறுத்தி விட்டதாக, செய்திகள் வெளியானதற்குப் பின் ராஜபக்ஷே, இந்த உறுதிமொழியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தை நிறுத்தம் பற்றிய தகவல்களை மறுத்த, இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், "பேச்சுவார்த்தையில், தனது நிலைப்பாடு குறித்து, டி.என்.ஏ., மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும், பார்லிமென்ட் நிலைக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது பற்றியும் ஆலோசிக்க வேண்டும்' என தெரிவித்தார். இந்நிலையில், இடம் பெயர்ந்த தமிழர்கள் வாழ வழிசெய்வதற்காக, இந்தியாவின் சார்பில், இரண்டாவது கட்டமாக, 260 மில்லியன் டாலர் மதிப்பில் மேலும், 49 ஆயிரம் வீடுகள் கட்டித் தரும் ஒப்பந்தத்தில் கிருஷ்ணாவும், பெரீசும் நேற்று கையெழுத்திட்டனர்.
பெரீசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில், மீனவர்கள் பிரச்னை பற்றியும், கிருஷ்ணா விவாதித்தார்.

