'தானே' புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்கும் - பிரதமர்
'தானே' புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தானே புயல் நிவாரண தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எம்.கிருஷ்ணசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தானே புயலால் புதுச்சேரியும், தமிழகத்தின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த முந்திரி, பலா, தென்னை மரங்களை அந்தப் புயல் வேறோடு சாய்த்துவிட்டது. ஒரு மரம்கூட தப்பவில்லை. ஒவ்வொரு மரமும் 45 ஆண்டுகள் வயதுள்ளவை.
இந்த மரங்களையே நம்பியிருந்த அந்தப் பகுதி மக்கள் அனைவரும் தற்போது தெருவுக்கு வந்துவிட்டனர். இவர்கள் தங்கள் பழைய நிலையை அடைவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் ஆகும். அந்தப் பகுதி விவசாயிகளில் பெரும்பாலானோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்கள். அவர்களது குடிசை மற்றும் வீடுகளும் நாசமடைந்துவிட்டன.
வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் இழந்து, உதவுவார் இல்லாமல் நிற்கும் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். எனவே இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, கூடுதல் தொகை ஒதுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் எழுதிய பதில் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த டிசம்பர் 29 மற்றும் 30-ந் தேதிகளில் வீசிய தானே புயலினால் ஏற்பட்ட பெருத்த பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகை குறித்து கடந்த 6-ந் தேதி நான் கடிதம் அனுப்பி இருந்தேன். தானே புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.500 கோடியையும், புதுச்சேரிக்கு ரூ.125 கோடியையும் மத்திய அரசு வழங்கியது.
இந்த பாதிப்புகளை தற்போது மத்திய குழு நேரடியாக பார்வையிட்டு வருகிறது. இந்த குழு அறிக்கை அளிக்க உள்ளது. அந்த அறிக்கையின்படி, இறுதி நிவாரணத்தொகை முடிவு செய்யப்படும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அவர்களின் நிவாரணத்துக்காகவும், மறுவாழ்வுக்காகவும் என்னென்ன உதவிகள் வேண்டுமோ, அனைத்தையும் மத்திய அரசு செய்யும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

