திட்டக்குழு மீது கமல்நாத் கடும் தாக்கு

மத்திய திட்டக் குழு வெறுமனே கட்டளையிடும் அதிகார அமைப்பாகத்தான் உள்ளது. அக்குழுவுக்கு சாலை போக்குவரத்து, மேம்பாட்டில் எவ்வித அனுபவமும் இல்லை என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் கமல்நாத் குற்றம் சாட்டினார்.

நாளொன்றுக்கு 20 கி.மீ. தூர நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்ற தனது துறையின் இலக்கை எட்டுவதற்கு திட்டக்குழு அனுமதிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். மத்திய திட்டக்குழு திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். இந்த விழாவில் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே பல நண்பர்களும் நீங்கள் நினைப்பதைப் போல நாளொன்றுக்கு 20 கி.மீ. தூர சாலை அமைக்க முடியாது, அதற்கு திட்டக் குழு அனுமதிக்காது என்று கூறினர். அவர்கள் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது இப்போதுதான் புரிகிறது என்றார் கமல்நாத்.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் செயல்பாடு மிக வேகமாக உள்ளது. நாளொன்றுக்கு 20 கி.மீ, தூர சாலை அமைக்க வேண்டும் என்ற இலக்கை எட்டுவதில் தீவிரமாக உள்ளது என்று மத்திய திட்டக்குழு குறிப்பிட்டது. அத்துடன் யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுமாறு அமைச்சகத்தை அறிவுறுத்தியது.

சாலை அமைப்பதில் திட்டக் குழுவின் கணிப்புக்கு நேர்மாறாக உண்மை நிலை உள்ளது. யதார்த்த நிலையை திட்டக்குழு முற்றிலும் அறிந்திருக்கவில்லை என்பது புலனாகியுள்ளது. மதிப்பீட்டு புத்தகம் தயாரிப்பும், உண்மையில் சாலை போடுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதை திட்டக்குழு உணரவேயில்லை.

திட்டக்குழு எந்த மதிப்பீட்டு அடிப்படையில் அறிக்கைகளைத் தயார் செய்கிறது என்பது புரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அறிக்கைகளைத் தயார் செய்து விடுகின்றனர். அதனடிப்படையில் அதிகாரம் புரியும் குழுவாகத்தான் திட்டக் குழு செயல்படுகிறது. குழுவின் பரிந்துரைகள் அல்லது அறிக்கைகள் உண்மை நிலைக்கு ஒத்துவரும் வகையில் தயாரிக்கப்படுவதில்லை. அறிக்கைகள் குறைந்தபட்சம் அர்த்தமுள்ளதாக தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசியல்வாதியாக பல ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள தமக்கு யதார்த்த நிலை நன்கு புரிகிறது. ஆனால் வெறுமனே அறையில் அமர்ந்து கொண்டு திட்டங்களைத் தீட்டுவதிலும், அதை செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் திட்டக் குழு அளிக்கிறது. இது நடைமுறைக்கு சற்றும் பொருந்துவதாக இல்லை.

தனியார் பங்கேற்புடன் சாலைகளை அமைக்கும் பணியை நிறைவேற்றுவதில் இடத்துக்கு இடம், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. ஒரே மாதிரியான விதிமுறை அனைத்து இடங்களுக்கும் பொருந்தாது. உதாரணமாக கேரள மாநிலத்தில் சாலை அமைக்கும்போது கடைப்பிடிக்கும் நடைமுறை அசாம் மாநிலத்துக்கோ அல்லது மத்திய பிரதேசத்துக்கோ பொருந்தாது. இடத்துக்குத் தகுந்த வகையில் நெளிவு, சுளிவோடுதான் அதை செயல்படுத்த வேண்டும். இந்த யதார்த்த நிலை திட்டக்குழுவுக்கு சிறிதும் தெரியவில்லை என்றார் கமல்நாத்.

முன்னதாக 2009-2014-ம் ஆண்டில் சாலை மேம்பாட்டில் ரூ. 2.76 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த உள்ள முதலீட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அலுவாலியா பதில்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்த கருத்துகளை ஆரோக்கியமான ஆலோசனைகளாகக் கருதுகிறோம். திட்டக்குழுவில் சில குறைகள் இருப்பதை மறுக்க முடியாது. அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அலுவாலியா. 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com