தி.மு.க.-அ.தி.மு.க. மோதல்
திருமங்கலம் நகரில் கடைகளை மூடுமாறு கோஷமிட்டுச் சென்ற அ.தி.மு.க.வினருக்கும் கடைகளைத் திறக்குமாறு கூறிய தி.மு.க.வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தி.மு.க. நகரச் செயலர் நாகராஜன் உள்ளிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் திங்கள்கிழமை அறிவித்திருந்தனர். இந் நிலையில், திருமங்கலம் நகரில் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, கடைகளை மூடுமாறு அ.தி.மு.க. மாவட்டச் செயலர் ஜெயராமன் தலைமையில் அக் கட்சியினர் உசிலம்பட்டி சாலையில் கோஷமிட்டுச் சென்றனர்.
அப்போது கடைகளைத் திறக்கும்படி தி.மு.க. நகரச் செயலர் நாகராஜன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கூறினர். இதனையடுத்து, இரு கட்சியினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. நகரச் செயலர் நாகராஜனின் மண்டை உடைந்தது. மேலும், அக் கட்சியைச் சேர்ந்த முருகன், ராஜேந்திரன் உள்ளிட்ட 5 பேருக்குக் காயமேற்பட்டது.
அவர்கள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அ.தி.மு.க.வினரைக் கைதுசெய்யக் கோரி, உசிலம்பட்டி சாலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் வாகனங்களின் மீதும் தி.மு.க.வினர் கற்களை வீசினர். எஸ்.பி. மனோகர் தலைமையில் போலீஸôர் திருமங்கலம் நகரில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, தி.மு.க. நகரச் செயலர் நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், அ.தி.மு.க. புறநகர் மாவட்டச் செயலர் எம்.ஜெயராமன், நகரச் செயலர் விஜயன், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வைரன், சதீஷ் சண்முகம், அழகர் உள்ளிட்ட 51 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை ஆயுதப்படை மைதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே புறநகர் மாவட்ட அதிமுக செயலர் ஜெயராமன், நகரச் செயலர் விஜயன் உள்பட 16 பேர் மீது கொலை முயற்சி உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 60 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

