தேசிய அடையாள அட்டை நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு உதவும் - ப.சிதம்பரம்
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதால் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு உதவும் என்று ப.சிதம்பரம் கூறினார்.
இந்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்தும் ஒரு அங்கமாக கடற்கரையையொட்டியுள்ள 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள கடற்கரை கிராமங்களில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக மகாபலிபுரம் அருகே உள்ள பட்டிபுலம் கடற்கரை கிராமத்தில் 1,171 பேருக்கு தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:-
இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இது போன்ற கணக்கெடுப்பை நடத்தினால் மட்டும் போதாது. கணக்கெடுப்புக்கு பிறகு வசிப்பவர்கள் யார்? அவர் இந்தியரா? அந்நியரா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தான் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 12 மாவட்டங்கள், 34 தாலுக்காக்கள், 229 கடற்கரை கிராமங்கள் என மொத்தம் 11 லட்சத்து 77 ஆயிரத்து 860 பேரிடம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. வீடு வீடாக சென்று மடிக்கணினி மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 18 வயதுக்கு மேல் உள்ள 75 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இது தொடக்கம் தான். இன்னும் பணிகள் இருக்கிறது.
இந்த கணக்கெடுப்பின் போது நபரின் பெயர், வசிக்கும் நிலை, தந்தை பெயர், தொழில் என 15 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. 10 விரல் கைரேகை மற்றும் இரு கருவிழி படலமும் பதியப்படும். இதனால் ஒருவரின் அடையாள அட்டையை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அப்படி தில்லுமுல்லு செய்தால் அதை மின்னணு கருவி மூலம் கண்டுபிடித்து விடலாம்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு குடிமக்கள் மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி அப்பகுதியில் வழக்கமாக வசிப்பவர் என்ற அடிப்படையில் விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதன் மூலம் இந்தியாவில் யார்? யார்? வசிக்கிறார்கள்?, குடியுரிமை பெற்றவர்கள் யார்?, இந்தியர்கள் யார்? அந்நியர்கள் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
ஆதாருக்கும், எங்களுக்கும் எந்த சச்சரவும் இல்லை. ஆதார் என்பது ஒரு எண். இது அடையாள அட்டை. ஆதாரின் எண் இந்த அடையாள அட்டையுடன் இணைக்கப்படும் போது அதற்கு தனி பெருமை கிடைக்கும். ஆதார் எண் இணைக்கப்பட்டு, பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் போது, அந்த அடையாள அட்டைகளை பயன்படுத்தி அரசின் சலுகைகளை சிக்கல் இல்லாமல் பெற முடியும்.
உதாரணமாக கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊக்க தொகையை போலியாக உள்ள மாணவர்களும் பெற முடியும். பணம் சரியான மாணவருக்கு சென்று சேர்ந்ததா? என்று கூட முடியாது. போலிகள் நம்மை விட திறமைசாலிகளாக இருக்கிறார்கள் என்பதே ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். போலி ரேஷன்கார்டு, போலி வாக்காளர் அடையாள அட்டை என்று எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன.
இதை தவிர்க்க இந்த அடையாள அட்டை உதவும். மாணவர்கள் வங்கி கணக்குடன் இந்த அடையாள அட்டையையும் பயன்படுத்தும் போது நேரடியாக பணம் வங்கி வழியாக சரியான மாணவருக்கு சென்றடையும். ஒருவகையில் போலிகளை கட்டுப்படுத்தவும் இந்த அடையாள அட்டை உதவும். மேலும் நாட்டின் பாதுகாப்பையும் பலப்படுத்தும். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
தமிழகம் முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் ஒரு கோடியே 83 லட்சத்து 82 ஆயிரத்து 610 படிவங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் இதுவரையில் 5 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 284 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் இந்த பணி முடிவடைந்து உள்ளது.
இந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 5 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக உள்ளது. பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் டிசம்பர் மாத இறுதிக்குள் அட்டைகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எஸ்.கோபாலகிருஷ்ணன், பதிவுத்துறை தலைவர் சந்திரமவுலி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

