தேமுதிக வார்டு கவுன்சிலர் வெட்டிக் கொலை

செங்கல்பட்டு நகராட்சி 1வது வார்டு தேமுதிக கவுன்சிலர் சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு நகராட்சி 1வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் தேமுதிகவைச் சேர்ந்த கே. சுரேஷ்(39). அதே வார்டில் இரண்டாவது முறையாக கவுன்சிலராகத் தேர்வானார். தேமுதிக நகர செயலாளராகவும் இருந்தார். அவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவர் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள ஜேசிகே நகரில் வசித்து வந்தார். வீட்டுக்கு அடுத்த தெருவில் அவரது அலுவலகம் உள்ளது. 

காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று மாலை அலுவலகத்தில் வைத்து கட்சிக்காரர்களை சந்தித்தார். இரவு 9 மணி அளவில் அவரது அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். அவரது தலை, கழுத்து உள்பட பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமைடந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிர் இழந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இது குறித்து அறிந்த செங்கல்பட்டு தேமுதிக எம்.எல்.ஏ. அனகை முருகேசன் மற்றும் அக்கட்சியினர் சம்பவ இடத்திற்கு அருகே குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி மனோகரன், டவுன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. கடந்த 6ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட செங்கல்பட்டு நகர்மன்ற திமுக துணை தலைவர் ரவி பிரகாஷின் நெருங்கிய நண்பர் சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com