நக்ஸலைட்களை ஒடுக்க ஒருங்கிணைந்த தனிப் படையை உருவாக்க வேண்டும் -

நக்ஸலைட்களை ஒடுக்க ஒருங்கிணைந்த தனிப் படையை உருவாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நான்கு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நக்ஸல் பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிகார், சத்தீஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேச முதல்வர்கள் பங்கேற்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதால் மாநில ஆளுநர் பங்கேற்றார். மேற்கு வங்கம் சார்பில் மூத்த அமைச்சர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியது: சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநில அரசுகள் ஒரு தனி படையை உருவாக்க வேண்டும். இந்த படை மாநில தலைமைச் செயலர் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக இருக்க வேண்டும். நக்ஸல்களை ஒழிக்க மத்திய அரசு கூடுதலாக ஹெலிகாப்டர்களை அளிக்கத் தயாராக உள்ளது. இதன் மூலம் படையினரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக முன்னேற்றிச் செல்லலாம்.

400 காவல் நிலையங்கள்: நக்ஸலைட் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 400 காவல் நிலையங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியில் 80 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கும். எஞ்சிய 20 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும். ஒவ்வொன்றும் ரூ. 2 கோடி செலவில் நவீன வசதிகளைக் கொண்டதாக இந்த காவல் நிலையங்கள் கட்டப்படவுள்ளன.

நக்ஸலைட்டுகளை ஒடுக்க ஐஜி அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரியை நியமிக்குமாறு ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.÷இந்த அதிகாரிகள் மற்ற மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நக்ஸலைட்டுகளுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

மேம்பாட்டுப் பணி: நக்ஸலைட் பாதிப்புக்கு உள்ளான பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்து திட்டக்குழு உறுப்பினர் செயலர் தலைமையில் வழிகாட்டு முறை உருவாக்கப்படும். மாநிலத்தில் பின்தங்கிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும். நக்ஸலைட் பாதிப்பால் 34 மாவட்டங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மொத்தம் ரூ. 950 கோடி மதிப்பீட்டில் சாலைகள் மற்றும் பாலங்களை அமைக்க மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நக்ஸலைட் பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் மேம்பாட்டுக்கு சிறப்பு மேம்பாட்டு நிதியத்தை ஏற்படுத்துவது குறித்து திட்டக்குழு பரிசீலித்து வருகிறது. சாலை வசதி, குடிநீர் வசதி, ஆரம்பக் கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்த நிதி ஒதுக்கப்படும். இது தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு விரைவில் இதற்கான நிதி ஒதுக்கப்படும்.

பொதுமக்களுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் நக்ஸலைட்டுகளுக்குக் கிடையாது. ஆயுதங்களை வைத்திருப்பதற்கும் அவர்களுக்கு உரிமை இல்லை. இது தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இவர்களின் செயல்பாடு முழுக்க முழுக்க சட்ட விரோதமானது.

நக்ஸலைட்டுகளால் பாதுகாப்புப் படையினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தந்தேவாடாவில் நக்ஸலைட் தாக்கியதில் 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்தனர். ஜூன் 29-ம் தேதி சத்தீஸ்கரில் நடத்திய தாக்குதலில் 27 வீரர்கள் உயிரிழந்தனர். இது தவிர ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தகர்க்கப்பட்டதில் 149 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். நக்ஸலைட்களுக்கு எதிரான தாக்குதலில் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினரின் அணுகுமுறையில் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் நக்ஸலைட்டுகளின் நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான 6 மாத காலத்தில் மொத்தம் 1,103 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 97 நக்ஸலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,341 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 209 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர் என்றும் சிதம்பரம் குறிப்பிட்டார்.

நக்ஸலைட்களில் சிபிஐ மாவோயிஸ்டுகள் எனப்படுவோர் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். போலீஸின் உளவாளிகள் எனக் கூறி பொதுமக்களையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையான காலத்தில் ஆண்டுக்கு 500 பொதுமக்கள் நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். 2009-ம் ஆண்டு 591 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 211 பேரை போலீஸ் உளவாளிகள் என குறிப்பிட்டு கொன்றுள்ளனர்.

 2010-ம் ஆண்டில் கடந்த 6 மாதங்களில் 325 பொதுமக்கள் நக்ஸலைட் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இதில் 142 பேரை போலீஸ் உளவாளிகள் எனக் கூறி கொன்றுள்ளனர்.

நக்ஸலைட் பிரச்னை மிகவும் மோசமான பிரச்னை. இதில் அந்தந்த மாநில முதல்வர்கள் திறந்த மனதுடன், இதனால் விளையும் நல்ல, கெட்ட விஷயங்களை விவாதிக்க வேண்டும் என்றார் சிதம்பரம். முதல்வர்கள் ஒப்புதல்: ஒருங்கிணைந்த தனிப் படை அமைப்பதற்கு நான்கு மாநில முதல்வர்களும் ஒப்புக் கொண்டனர். மத்திய அரசின் இத்தீர்மானத்தை ஒருமனதாக இவர்கள் ஏற்றுக் கொண்டனர். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com