பசும்பொன்னில் ரூ.39 லட்சத்தில் தியான மண்டபம் - அரசு அறிவிப்பு

"பசும்பொன்னில் ரூ.39 லட்சத்தில் தியான மண்டபம் அமைக்கப்படும்,' என இங்கு நடந்த அரசு விழாவில் அறிவிக்கபட்டது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 104வது பிறந்த நாள், 49வது குருபூஜை நேற்று நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோவை காமாட்சிபூரி ஆதினம் தலைமையில் யாகசாலை பூஜை நடந்தது. மாலையில் நடந்த அரசு விழாவிற்கு கலெக்டர் அருண்ராய் தலைமை வகித்தார்.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: அ.தி.மு.க., துவங்கிய பின்புதான், தேவரின் புகழ் உலகம் முழுவதும் தெரிகிறது. மக்கள் மறந்து விடுவர் என பயந்து, மற்ற கட்சியினர் தேவர் நினைவிடத்துக்கு வருகின்றனர், என்றார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி பேசுகையில்,"" தேவரைப்போலவே ஜெயலலிதாவும் மக்களைப்பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறார்,'' என்றார். அமைச்சர் கோகுல இந்திரா பேசுகையில், ""சுற்றுலா மேம்பாட்டு துறை நிதி மூலம் 39 லட்சம் செலவில், பசும்பொன்னில் தியான மண்டபம் கட்டப்படும்,'' என்றார்.இதை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தென்மண்டல ஐ.ஜி.,ராஜேஷ் தாஸ் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.

மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில், 3 உதவி கமிஷனர்கள், 35 இன்ஸ்பெக்டர்கள், 30 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

முன்னெச்சரிக்கையாக, இப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அழகர்கோவில் ரோடு, பாலம் ஸ்டேஷன் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. யானைக்கல் பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றதால், நெரிசல் ஏற்பட்டது. மாலையில் அரசியல் கட்சிகள் சார்பில் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. திருநகரில் தேவர் வாழ்ந்த இல்லத்தில், அவரது படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். 

முதல்வர் மரியாதை:சென்னை நந்தனத்தில் உள்ள தேவரின் சிலை, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா, தேவர் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், சசிகலாவும் மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், சென்னை மேயர் சைதை துரைசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தமிழன் மற்றும் அ.தி.மு.க., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com