பயிற்சியில் சேவக் அலட்சியம்
மூன்று டெஸ்ட் தோல்விகளுக்குப் பின்பும் இந்திய வீரர்கள் திருந்தவில்லை. நான்காவது போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சேவக் உள்ளிட்டோர் பயிற்சியில் அக்கறை செலுத்தவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் வெல்லும் நோக்கத்துடன் சென்ற இந்திய அணி, அடுத்தடுத்த தோல்விகளால் 0-3 என, டெஸ்ட் தொடரை இழந்து பரிதாபமாக நிற்கிறது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட், அடிலெய்டில் வரும் 24ம் தேதி துவங்குகிறது.
மூன்றாவது டெஸ்ட் மூன்று நாட்களில் முடிந்ததால் எஞ்சியுள்ள இரு நாட்களில் பயிற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் இதை யாரும் ஒழுங்காக செய்தது மாதிரி தெரியவில்லை. வீரர்கள், இரு பிரிவுகளாக நேற்று அடிலெய்டு வந்து சேர்ந்தனர். இன்று முதல் மூன்று நாட்கள் வீரர்கள் ஓய்வில் இருப்பார்களாம். வரும் 21ம் தேதி தான் பயிற்சியை துவக்குகின்றனர். இதனால், நேற்று மைதானத்தில் "ஹெல்மெட்', "பேடு' போன்ற எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், பந்தை எறியச் சொல்லி சேவக் ஏனோதானோ என பயிற்சியில் சிறிது நேரம் ஈடுபட்டார்.
கடந்த மூன்று போட்டிகளின் 6 இன்னிங்சில், 5 முறை போல்டான டிராவிட், இரண்டு மணி நேரம் வரை பயிற்சி செய்தார். இவரது "புட் வொர்க்' சற்று தாமதமாக இருப்பதாலும், பேட், பேடுக்கு இடையில் இடைவெளி அதிகம் ஏற்படுவதால் தான் தொடர்ந்து போல்டாவதாக சிலர் அறிவுறுத்தினர். இதற்கு தகுந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியாளர் பிளட்சர், மூன்று டெஸ்டில் பங்கேற்காத ரோகித் சர்மாவுக்கு அதிக ஆலோசனைகள் வழங்கினார். அடிலெய்டு போட்டியில் விளையாட கேப்டன் தோனிக்கு தடை இருப்பதால், வேறு வழியின்றி சகா களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவரும் நேற்று பேட்டிங் பயிற்சி செய்தார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றிய உற்சாகத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, நான்காவது போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஆனால், விளையாடும் லெவனில் சுழற்பந்து வீச்சாளர் லியான் இடம்பெறலாம் எனத்தெரிகிறது.
Tags

