பாகிஸ்தான் வீரர் ஆமிர் செல்போனில் பேசினாரா? குற்றச்சாட்டை நிராகரித்தது ஐசிசி

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் (படம்) செல்போனைப் பயன்படுத்தவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூறியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் புதன்கிழமை இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட் செய்து கொண்டிருந்த போது அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆமிர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அடுத்து பேட் செய்ய தயாராக இருந்து கொண்டு செல்போனில் அவர் பேசியது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

ஐசிசி விதிகளின் படி விளையாட்டு வீரர்களின் உடை மாற்றும் அறைக்குள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. மேட்ச் ஃபிக்சிங் போன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்த விதியை ஐசிசி அமல்படுத்தியுள்ளது. ஆனால் அதனை மீறி ஆமிர் செல்போனில் பேசியுள்ளார்.

இது குறித்து ஐசிசி, புதன்கிழமை கூறியுள்ளது: இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேலாளரிடம் நாங்கள் விசாரித்துவிட்டோம். ஆமிர் செல்போனில் பேசியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவர் பேசியதாக வெளியாகியுள்ள விடியோ மிகக் குறைந்த நேரமே ஓடக்கூடியதாகவுள்ளது. அதில் அமீர் செல்போனில் பேசிக் கொண்டிருப்பது போல பார்ப்பவர்களுக்கு காட்டுகிறது. ஆனால் உண்மையில் ஹெல்மெட்டில் உள்ள தடுப்புக் கம்பிகளையே அவர் பிடித்துக் கொண்டும், ஹெல்மெட்டை சரி செய்து கொண்டும் உள்ளார். எனவே இதில் எவ்வித விதிமீறலும் இல்லை என்று ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கருத்தைத்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகமும் கூறியுள்ளது: ஹெல்மெட்டை கையால் பிடித்துக் கொண்டு மற்ற வீரர்கள் மற்றும் மேலாளரிடம் ஆமீர் பேசிக் கொண்டிருந்தார். அது செல்போனில் பேசுவது போல மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டது. வீரர்கள் அறையில் செல்போன் அனுமதிக்கப்படுவதே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

÷சமீபகாலமாக பாகிஸ்தான் அணி வீரர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இப்போது முகமது ஆமீர் மூலம் மேலும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com