பாமர மக்களைப் பற்றி கவலைப்படாத அரசு - சுஷ்மா ஸ்வராஜ்
பாமர மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் செய்தியாளர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் கூறியது: சோம்பலில் திளைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை தட்டி எழுப்புவதற்காக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறிப்பாக பாமர மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத அரசாக இது உள்ளது.
பெட்ரோல், டீசல், கெரசின், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த அரசு உணரவேயில்லை. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த விலை உயர்வை எவ்விதம் சமாளிப்பார்கள் என்பதும் இந்த அரசுக்குப் புரியவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இதனால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகள், குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும் தாமாக முன்வந்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
தற்போதைய சூழலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் ஏதுமில்லை. இருப்பினும் பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது. அப்போது இது தொடர்பாக தீர்மானிக்கப்படும்.
கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோலியப் பொருள்களின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நிச்சயம் எழுப்புவர் என்று அவர் குறிப்பிட்டார். அண்டை நாடுகளில் கெரசின் மற்றும் எரிவாயு விற்பனை விலையை அரசு குறிப்பிட்டுள்ளது. அங்கு விலை அதிகமாகவும் இங்கு குறைவாகவும் உள்ளதைப் போன்ற தோற்றத்தை அரசு தோற்றுவிக்க முயன்றுள்ளது. ஆனால் தனக்கு வசதியாக இவ்விரண்டு விலையையும் பட்டியலிட்ட அரசு, மிக சாமர்த்தியமாக பெட்ரோல், டீசல் விலையைக் குறிப்பிடவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.÷பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 26, வங்கதேசத்தில் ரூ. 22, நேபாளத்தில் ரூ. 34, பர்மாவில் ரூ. 30. ஆனால் இந்தியாவில் மட்டும் ஒரு லிட்டர் விலை ரூ. 55 என்று அவர் கூறினார்.
பாஜக தலைமையிலான முந்தைய ஆட்சியின்போது பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை அரசு நீக்கியது. அத்துடன் விலையைக் கட்டுப்படுத்த அதிகரித்து வரும் விலையில் பாதியளவை எண்ணெய் நிறுவனங்களே ஏற்கும் வகையில் ஒரு வழிமுறையை கண்டுபிடித்து செயல்படுத்தியது.
இதனால் தற்போது பட்ஜெட் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து ரூ. 1.20 லட்சம் கோடி ஈவுத் தொகை (டிவிடெண்ட்) கிடைக்கும். இதற்காக விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய பிரதேசத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் முழு அளவில் நடைபெற்றதாகவும், அரசு அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களான மருத்துக் கடைகள் மட்டும் திறந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

