பி.இ. விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் - பொன்முடி

பி.இ. படிப்புகளில் சேருவதற்கு பொதுப் பிரிவில் விண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என்று உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறினார். பி.இ. பொதுப் பிரிவு இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

பி.இ. தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்று பி.இ. இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களில் முதல் 10 பேருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதங்களை உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி வழங்கினார்.

அதற்கு முன்பாக அமைச்சர் பொன்முடி பேசியது: அண்ணா பல்கலைக்கழகங்கள், அவற்றின் உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியில் கல்லூரிகள் (அரசு ஒதுக்கீடு) ஆகியவற்றில் 2010-11-ம் கல்வி ஆண்டில் பி.இ. படிப்புகளில் இதுவரை 1,13,380 இடங்கள் கிடைத்தன. இவற்றில் தொழிற்பிரிவில் 3,761, உடல் ஊனமுற்றோர் பிரிவில் 327, விளையாட்டு பிரிவில் 99 என 4,187 இடங்கள் நிரம்பியுள்ளன.

தொழிற் பிரிவில் உள்ள காலியிடங்கள் போக மீதி 1,08,941 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் பொதுப் பிரிவு இடங்களாகக் கருதப்படும். இவற்றை நிரப்புவதற்கு கட்ஆஃப் மதிப்பெண் 200-ல் இருந்து 169 வரை பெற்ற 45,435 பேர் முதலில்  அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 20-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

திங்கள்கிழமை (ஜூலை 5) தொடங்கிய கலந்தாய்வின் முதல் பிரிவில் கட்ஆஃப் மதிப்பெண் 200 முதல் 199 வரை பெற்ற மாணவர்கள் 578 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 150 பேர் பங்கேற்கவில்லை. அவர்கள் மருத்துவம், ஐ.ஐ.டி. உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்திருக்கலாம்.

பி.இ. இடங்களைத் தேர்வு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அண்ணா ஒருமை வகை பல்கலைக்கழகத்தின் (சென்னை) கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக். கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. ஆகியவற்றில் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

கட்ஆஃப் மதிப்பெண் 169-க்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி தொடங்கும். கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ம் தேதி முடியும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை கலந்தாய்வை நடத்த வேண்டியிருக்கும் என தெரிகிறது.

பி.இ. பொதுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த எல்லா மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இடம் கிடைக்கும் என்றார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒருமை வகை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், பதிவாளர் சண்முகவேல், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ், இயக்குநர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com