பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை - பாமகவினருக்கு அன்புமணி எச்சரிக்கை

பாமகவில் பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார். வேலூர் ஒருங்கிணைந்த கிழக்கு மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், பாமக மாநில இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பேசியது:  அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடும் கட்சி பாமக. பொதுத் தேர்தல் வர உள்ள நிலையில், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்படும். கட்சிக்காக அன்று உழைத்தவர்கள் இன்று அமைதியாக கிராமங்களில் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களை அழைத்து தலைமை வகிக்கச் செய்து நிகழ்ச்சிகளை நடத்துங்கள். பொறுப்பில் இருந்தும் செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பென்னாகரம் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் நாம் தோற்கடிக்கப்பட்டோம்.  இது ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்ட தேர்தல். நாம் பணம் தராமல் இரண்டாவது இடம் பெற்றோம். இனி பென்னாகரம் தேர்தல் பார்முலாவை பயன்படுத்த உள்ளோம். விஞ்ஞான ரீதியில் அரசியல் நடத்த உள்ளோம். இளைஞர்களை ஊக்குவிக்க உள்ளோம்.

வாலாஜா ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று சென்றதால் ரயில்வே துறைக்கு ரூ.5 கோடி வரை லாபம் கிடைத்தது. தற்போது எந்த ரயிலும் நிற்பதில்லையாம். இதுகுறித்து 4 முறை மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். தன்னால் முடியாது என்று அமைச்சர் சொல்லட்டும். நான் நிறுத்திக் காட்டுக்கிறேன்.

பாமக 7 இடங்களில் தோற்றதும் அழிந்து விட்டது, ஒழிந்து விட்டது என்று பலர் கூறினர். பாமகவை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. பாமக இல்லாமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தலைவர் ராமதாஸ் ஒப்புதலோடு சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

கூட்டணி பற்றி யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை. தலைவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார். பாமக இல்லாமல் ஆட்சிக்கு யாரும் வரமுடியாது என்பதை உணர்த்த வேண்டும் என்றார் அவர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு: பாமக புத்துணர்வு பெற்று செயல்பட்டு வருகிறது. எதிர்கட்சிகளை எதிர்கொள்ளத் தயாராகி உள்ளது. 52 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக பாமக விளங்குகிறது. இளைஞர் பட்டாளம் அதிகம் உள்ள ஒரே கட்சி பாமகதான் என்றார் அவர்.

பாமக தலைவர் கோ.க.மணி: நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாமகதான் வெற்றி பெறும். தமிழகத்தில் சுகாதாரத்துறை தன்னிறைவு பெற பாடுபட்டவர் அன்புமணி. தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி அமையும். சட்டப் பேரவைத் தேர்தல் வர உள்ளது. அதற்குள்ளாக கிராமக் கிளைகளை வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்துக்கு ஆர்க்காடு எம்.எல்.ஏ. கே.எஸ்.இளவழகன் தலைமை வகித்தார். இதேபோல, திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜி.பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com