மகளிர் சுய உதவி குழு தலைவி கழுத்தை அறுத்துக்கொலை

தூங்கிக்கொண்டு இருந்த மகளிர் சுயஉதவி குழு தலைவியை தட்டி எழுப்பி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போலீஸ் உடையில் வந்து கொலை செய்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னை, போரூரை அடுத்த மாங்காடு அருகே உள்ளது, கெருகம்பாக்கம். அங்குள்ள ஆகாஷ்நகர் பகுதியில் ரவி (வயது 40) என்பவர், குடும்பத்துடன் வசித்து வருகிறார். சென்னை பிராட்வேயில் உள்ள சரவணபவன் ஓட்டலில் மானேஜராக அவர் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி பெயர், அம்பிகா(35), இவர்களுக்கு பாக்கியன் (17), அரவிந்தன்(14), என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஏற்கனவே அவர்கள் போரூரில் வசித்தபோது, அம்பிகா மகளிர் சுய உதவிக்குழு அமைத்து, அந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்க வங்கிகளில் கடன் வாங்கிக் கொடுத்து வந்தார்.

போரூரில் இருந்து கெருகம்பாக்கம் வந்து சொந்த வீடு கட்டி குடியேறிய பிறகும், மகளிர் சுயஉதவிக்குழு பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் அம்பிகாவிற்கு அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் இருந்தது.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த அம்பிகா, எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த அம்பிகா, குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டு இருந்தார்.

நள்ளிரவு 2 மணியளவில் வீட்டின் கதவை யாரோ தட்டுவது போல் சத்தம் கேட்டது. உடனே அவருடைய கணவர் ரவி கதவை திறந்து பார்த்தபோது வெளியே இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற போலீஸ் நிலையத்தில் இருந்து வந்திருப்பதாக கூறிய அவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களில் லோன் வாங்கி கொடுத்ததில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், அது தொடர்பாக அம்பிகாவிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் ரவியிடம் தெரிவித்தனர். வெளியே போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

சத்தம் கேட்டு அவருடைய மனைவி அம்பிகா எழுந்து வந்தார். அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, சட்டை போட்டுக்கொண்டு வருவதாக கூறி ரவி அறைக்குள் சென்று இருக்கிறார். அவர் வெளியே வருவதற்குள் அங்கு இருந்த அம்பிகாவை காணாமல் ரவி அதிர்ச்சி அடைந்தார்.

அக்கம்பக்கத்தில் அவர், தேடிப்பார்த்த போது சிறிது தூரத்தில் மனைவி அம்பிகா கழுத்து அறுக்கப்பட்டும், முதுகு, கை, வாய் உள்ளிட்ட இடங்களில் வெட்டுப்பட்டும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆதிமூலம், ரகுபதி உட்பட ஏராளமான போலீசார் வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். அம்பிகாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- ரவி குடும்பத்தினர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு போரூரில் குடியிருந்தபோது அம்பிகா மகளிர் சுய உதவிக்குழுக்களில் இணைந்து வங்கிகளில் லோன் வாங்கி கொடுத்து வந்தார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு போரூர் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு அவர் தோற்று விட்டார்.

பின்பு அங்கிருந்து வீட்டை காலி செய்து விட்டு, சொந்தமாக இங்கு வீடு கட்டி குடிவந்து விட்டார்கள். இந்த பகுதியில் உள்ள மகளிர்களுக்கும் அம்பிகா கடன் வாங்கி கொடுத்து வந்தார். போரூர்-குன்றத்தூர் சாலையில் உள்ள ஒரு வங்கியில் அதிக அளவில் அவர் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அந்த வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே இருந்த முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் எல்லாம் எரிந்து நாசமாகி விட்டதாகவும், இதனால் அந்த வங்கியின் அதிகாரிகள் அம்பிகாவின் சார்பில் கடன் வாங்கியவர்களின் முகவரிகளை கேட்டு இருக்கிறார்கள். ஆனால், கடன் வாங்கியவர்கள் பெயர்களை சொல்லக்கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.

இதனால், இரு தரப்பிலிருந்தும் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தனது கணவர் ரவியிடம் அம்பிகா அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட்டு விட்டு வெளியே சென்ற அம்பிகா நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வந்து இருக்கிறார். பின் கணவருக்கு சாப்பாடு போட்டு விட்டு அனைவரும் தூங்கி விட்டனர்.

நள்ளிரவில் வீட்டிற்கு வந்த இருவர், காக்கிபேண்ட், ஷூவும், மேலே கறுப்பு நிற ஜர்கின் அணிந்திருந்தனர். அம்பிகாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரவியிடம் கூறிய அவர்கள், பனி அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் டீ போட்டுக்கொடுங்கள் என்று கூறியுள்ளனர். உடனே ரவி பால் இல்லை என்று கூறியதால், பரவாயில்லை கொஞ்சம் கருப்பு காபி போட்டுக்கொடு என்று கூறி இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் எழுந்து வந்த ரவியின் மூத்த மகன் பாக்கியன், நான் டீ போட்டு எடுத்து வருகிறேன் என்று கூறி, உள்ளே சென்று இருக்கிறார். அவர் பின்னாலேயே ரவியும் "இருங்கள் நான் சட்டை போட்டு வந்து விடுகிறேன்" என்று உள்ளே சென்றார்.

வெளியே வந்து பார்த்த போது, வந்தவர்களில் ஒருவர் மட்டும் வாசலில் நின்று கொண்டு இருந்ததாகவும், தனது மனைவியை காணவில்லை என்றும் ரவி கூறினார். உடனே அவர் மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்று தெரு முழுவதும் தேடியும் அம்பிகாவை காணவில்லை.

சிறிது நேரத்தில், வீட்டிலிருந்து 150 அடி தூரத்தில் அம்பிகா வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தந்தையும், மகனும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வருவதால் அவர்களிடமும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம்.

கொலையாளிகள் தங்களை போலீஸ் என்று கூறியுள்ளனர். கொலை சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த தெருவிளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. எனவே இந்தக்கொலை, நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு உள்ளது". இவ்வாறு அந்த போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். துப்பறியும் மோப்பநாய் ராணி வரவழைக்கப்பட்டது. அது கொலை சம்பவம் நடந்த இடத்திலிருந்து கோவூர் மின் அலுவலகம் வரை ஓடி சென்று நின்று விட்டதாகவும், கொலையாளிகளை பிடிக்கவும் கொலையின் பின்னணி பற்றி துப்பு துலக்கவும் 4 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com