மதுரையைச் சேர்ந்த பெண்ணுக்கு "கல்பனா சாவ்லா' விருது

மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியும், குண்டு எறிதல் வீராங்கனையுமான தீபாவுக்கு "கல்பனா சாவ்லா' விருதை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.  இந்த விருதுடன் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும், ரூ.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. 64-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய பிறகு, சமூக நலத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகள், மகளிர் நலனுக்காகப் பணியாற்றி விருது பெற்ற அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விவரம்: சிறந்த சமூக பணியாளருக்கான விருது (மாற்றுத் திறனாளிகள் நலன்) நேத்ரோதயா அமைப்பைச் சேர்ந்த சி. கோவிந்தகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நிறுவனத்துக்கான விருது தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளி நிறுவனத்துக்கு தரப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனத்துக்கான விருது திருப்பூரைச் சேர்ந்த எஸ்.சி.எம். கார்மென்ட்ஸ் நிறுவனத்துக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்ததற்கான சிறந்த மருத்துவர் விருது டாக்டர் சி. ராமகுருவுக்கும் அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகருக்கு சிறந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் விருதும், திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும், சிறந்த நிறுவனத்துக்கான (மகளிர் நலன்) விருது மலைவாழ் மக்களின் சுகாதார முனைப்பு இயக்கத்துக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த சமூக பணியாளர் (மகளிர் நலன்) விருது கிரிஜா குமார பாபுவுக்கு வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி அவர்களின் மறுவாழ்வுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் பெ. அமுதா, சிறப்புத் திட்டங்களின் பலன்கள் அவர்களைச் சென்றடைய முயற்சிகள் மேற்கொண்டதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் பூ. முத்துவீரன், தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பை உருவாக்கியதற்காக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் ஆகியோருக்கு "சிறந்த மாவட்ட ஆட்சியர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான விருதுகள் வேறொரு நாளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com