மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால்மூன்று மாதத்தில் தெலுங்கானா - சுஷ்மா சுவராஜ் உறுதி
"அடுத்து வரும் லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.,) ஆட்சிக்கு வந்தால், மூன்று மாதங்களில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை நிறைவேற்றப்படும்,'' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்தார்.
ஆந்திரா, நலகொண்டா நகரில், என்.ஜி., கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு, ஆந்திர மாநில பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "போர் சபை' என பெயரிடப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய சுஷ்மா, மேலும் கூறியதாவது:தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடரில், மத்திய அரசு தீர்மானம் கொண்டு வந்தால், அதற்கு ஆதரவு அளிக்க பா.ஜ., தயாராக உள்ளது. பெரிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு சிறிய மாநிலங்கள் உருவானால் தான் வளர்ச்சியடைய முடியும். பா.ஜ., ஆட்சியின் போது புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று மாநிலங்கள் அபிவிருத்தி அடைந்ததால், அங்குள்ள மக்கள் பா.ஜ., ஆட்சி ஏற்பட ஆதரித்தனர்.
அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் தான், வளர்ச்சியில் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளன.தெலுங்கானா பகுதி சமமாக வளர்ச்சி பெறவில்லை என்பதற்கு, இந்த நலகொண்டா மாவட்டமே உதாரணம். மாவட்டத்தில் லட்சம் பேர் புளோரைட் தண்ணீரை குடித்து, நோய் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இவ்வாறு சுஷ்மா கூறினார்.

