மம்தா கட்சிக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு - முதல்வர் புத்ததேவ்

மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை  (பசுமை வேட்டை) நிறுத்த வேண்டும் என்று கூறிய திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கண்டம் தெரிவித்த அவர், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாலேயே அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கூறி வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்க சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து வியாழக்கிழமை அவர் பேசியது: மேற்கு வங்கம் முழுவதும் மாவோயிஸ்டுகள் வளர வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் விரும்புகிறது. அதனாலேயே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 35 கம்பெனி மத்தியப் படைகள் மற்றும் மாநில போலீஸôர் இணைந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் இப்போது அவர்கள் பின்வாங்கியுள்ளனர் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் பார்த்தா சாட்டர்ஜி, பயங்கரவாதிகளுக்கு எதிரான பசுமை வேட்டையை நிறுத்த வேண்டும் என்ற தங்கள் கட்சியின் கோரிக்கை நியாயமானதே என்றார். போலீஸ் வன்முறைக்கு எதிரான மாவோயிஸ்டு ஆதரவு மக்கள் குழுவோடு திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இல்லை என்பதை மறுக்க முடியுமா என்று புத்ததேவ் சவால் விடுத்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த திரிணமூல் காங்கிரஸôர், புத்ததேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய புத்ததேவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான மம்தா பானர்ஜி புதுதில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை புதன்கிழமை சந்தித்து மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை  நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்காது என்று நம்புகிறேன். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கையால் பங்குரா, புருலியா, மேற்கு மேதினிப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தாண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய 379 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் புத்ததேவ் கூறினார்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com