மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற ரயில் பெட்டிகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள் ரயில்களில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இயக்கப்பட்டு வந்தன. இதை, முன்பதிவுப் பெட்டிகளாக மாற்றியமைத்தது.
இந்த மாற்றம், மாற்றுத் திறனாளிகளுக்கு பெரிதும் இடர்பாடுகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெட்டிகளை முன்பதிவற்ற பெட்டிகளாக ரயில்களில் இணைத்திடக் கோரி ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். இதற்கு பதிலளித்து, அமைச்சர் பானர்ஜி எழுதிய கடிதத்தின் விவரத்தை தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அதன் விவரம்: முழுவதும் முன்பதிவுடன் இயங்கும் ரயில்கள் அல்லாத அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் அதி விரைவு ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் முன்பதிவற்ற பெட்டிகளாக இணைக்கப்படும். இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டு இருக்கைகள் ஒதுக்கீடு முறை மீண்டும் அவர்களுக்காக முன்போலவே ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

