மீனவர் பிரச்னையில் மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி - பழ. நெடுமாறன்
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டினார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்களைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மூட வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பழ.நெடுமாறன் பேசியதாவது: தமிழக மீனவர்களைத் தாக்கும் சம்பவத்தைக் கண்டித்து, எதிர்க்கட்சிகளெல்லாம் வீதியில் இறங்கி போராடி வருகின்றன. மாநிலத்தில் மட்டுமின்றி மத்திய அரசிலும் அதிகாரபீடத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியும் பிரச்னையை தீர்க்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.
எனினும், மீனவர் பிரச்னையை தீர்க்கக் கோரி அவரது கட்சியும் வீதியில் இறங்கி போராடுகிறது. நமது மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. போராடவில்லை. இலங்கை அரசைக் கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும்.
உலகின் சின்னஞ்சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கை, உலக நாடுகளை மதிக்க மறுக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையையே அவமானப்படுத்துகிறது. எனவே, ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்றார் பழ. நெடுமாறன்.

