முரளீதரன் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் உலகச் சாதனை மற்றும் வெற்றியுடன் ஓய்வுபெற்றார் முரளீதரன். காலேயில் நடைபெற்ற  இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்துடன் ஓய்வு பெறுவதாக முரளீதரன் சமீபத்தில் அறிவித்தார்.

ஏற்கெனவே 132 ஆட்டங்களில் விளையாடி 792 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் முரளீதரன். கடைசி டெஸ்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டும் என்ற எண்ணத்தோடு கடும் பயிற்சியை மேற்கொண்டார். தான் விளையாடிய காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் சச்சின் டெண்டுல்கரும், பிரையன் லாராவும் என்று முரளீதரன் கூறியிருந்தார். மேலும் தனது கடைசி டெஸ்டில் டெண்டுல்கருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஜாம்பவான் சச்சினை எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்த்தி 793-வது விக்கெட்டை வீழ்த்தினார். சச்சினை ஆட்டமிழக்கச் செய்தது அவருக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 798 விக்கெட்டுகளை எட்டினார். இந்தியா பாலோ ஆன் பெற்றதால் தொடர்ந்து பேட் செய்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய முரளீதரன், யுவராஜ் சிங்கை வீழ்த்தி 799-வது விக்கெட்டை எட்டினார். இந்தியாவின் கடைசி விக்கெட்டான ஓஜா-இஷாந்த் சர்மா விளையாடியபோது, 800-ஐ எட்டுவாரா முரளீதரன் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மனதில் தாண்டவமாடியது. 115-வது ஓவரை வீசிய முரளீதரன், ஓஜாவை ஆட்டமிழக்கச் செய்து, 800 விக்கெட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்ததோடு, இந்தியாவின் ஆட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்தார்.

கடைசி ஆட்டத்தில் வெற்றியோடு ஓய்வுபெறும் வாய்ப்பு கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த எல்லோருக்கும் கிடைத்ததில்லை. ஆனால் அந்தப் பெருமை சுழற்பந்து ஜாம்பவான் முரளீதரனுக்கு கிடைத்தது பெருமைக்குரியது. 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முரளீதரன். டெஸ்ட் போட்டிகளில் 22 முறை 10 விக்கெட்டுகளையும், ஒரு இன்னிங்ஸில் 67 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2002-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இவரது  சிறந்து பந்து வீச்சாகும்.

டெஸ்ட் போட்டிகளில் 11 முறை தொடர்நாயகன் விருதையும், 19 முறை ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 22 போட்டிகளில் விளையாடி 105 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாட்டுக்கு எதிராக 100 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.  இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் வார்னே இச்சாதனையை படைத்துள்ளார்.

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com