ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கைது

ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ராஜவீதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது33). பி.இ. பட்டதாரி. தற்போது நாமக்கல்லில் கோழி முட்டை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:-

என் அண்ணன் சுந்தரராஜன் மூலம் கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த புரோக்கர் ராதாகிருஷ்ண தொண்டைமான் எனக்கு அறிமுகமானார். அவர் என்னிடம், கோவை பீளமேடு விளாங்குறிச்சி கிராமத்தில் கொடிசியா வளாகம் அருகில் 5 பேருக்கு சொந்தமான 5.48 ஏக்கர் பரப்பளவு கொண்ட 60 பிளாட்டு நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறினார். அதன் பேரில் நான் ரூ.60 லட்சம் முன்பணம் கொடுத்து, அந்த 60 பிளாட்டுகளை 20-4-2007 அன்று எனது பெயருக்கு பவர் பத்திரம் (பவர் ஆப் அட்டார்னி) பெற்றேன்.

இந்த நிலையில், திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரைச் சேர்ந்த பனியன் பிரிண்டிங் நடத்தி வரும் கனகராஜ் (39) என்பவரை புரோக்கர் ராதாகிருஷ்ண தொண்டைமான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் கோவை பீளமேட்டில் 60 பிளாட்டு நிலம் விற்பனைக்கு இருப்பது குறித்து கூறினேன்.

இதைத் தொடர்ந்து, அதில் 32 பிளாட்டுகளை ஒரு பிளாட் ரூ.10 லட்சம் வீதம் ரூ.3 கோடியே 20 லட்சத்துக்கு கனகராஜ் விலை பேசினார். அதில் முன் பணமாக ரூ.32 லட்சம் கொடுத்து, 32 பிளாட்டுகளை தனது பெயருக்கு பவர் பத்திரம் எழுதி வாங்கினார்.

கனகராஜ் 3 நாட்கள் கழித்து கோவையில் உள்ள அந்த நிலத்தை அளக்க சென்ற போது, அந்த நிலத்தின் உரிமையாளர்கள் 'இது எங்கள் நிலம். நாங்கள் தான் இதன் உரிமையாளர்கள்' என்று தெரிவித்தனர். அதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ், அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக கூறி, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, தான் கொடுத்த ரூ.32 லட்சத்தை திருப்பி தரும்படி என்னிடம் கேட்டார்.

இது குறித்து கனகராஜின் பிரிண்டிங் நிறுவனத்தில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினோம். நான் கொடுக்க வேண்டிய ரூ.32 லட்சத்துக்கு ஈடாக திருப்பூர் மாநகராட்சி, நல்லூர் கிராமத்தில் என் மனைவி பெயரில் உள்ள ரூ.15 லட்சம் மதிப்புள்ள 5 1/2 சென்ட் நிலத்தை கனகராஜ் பெயருக்கு எழுதி கொடுத்தால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து தருவதாக கூறினார்.

அதன்படி என் மனைவி பெயரில் உள்ள நிலத்தை கனகராஜ் பெயருக்கு பதிவு செய்து கொடுத்தேன். ஆனால் கனகராஜ் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கொடுக்காமல், 'எனக்கு ரூ.85 லட்சம் பணம் வேண்டும். அப்போது தான் ஒப்பந்தத்தை ரத்து செய்து தருவேன்' என்று என்னை மிரட்டினார்.

இதற்கு நான் மறுத்ததால், உன்னிடம் எப்படி பணம் வாங்குவது என்பது எனக்கு தெரியும் என்று கூறி மிரட்டினார். இந்த நிலையில், கடந்த 10-7-2007 அன்று இரவு 9 மணி அளவில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அழைத்து வர சொன்னதாக கூறி, கனகராஜ் மற்றும் 2 பேர் என்னை மூலனூர் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு என்னை அடைத்து வைத்து, கனகராஜ், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் மூலனூர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் சிலர் சேர்ந்து தாக்கியதுடன் ரூ.85 லட்சம் பணத்தை கனகராஜூக்கு கொடுக்கும்படி கூறினார்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து, 'நான் ரூ.32 லட்சம் தானே தரவேண்டும்' என்று கேட்டதற்கு, `கனகராஜ், கோவையில் கூடுதலாக 2 பிளாட் ரூ.53 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். அதையும் நீதான் கொடுக்க வேண்டும்' என்று கூறினார்கள்.

பின்னர். 'ரூ.85 லட்சம் கொடுக்க முடியாவிட்டால், உன் அண்ணன் சுந்தரராஜன் பெயரில் அவினாசியில் உள்ள 4 1/2 ஏக்கர் நிலத்தை கனகராஜ் பெயருக்கு எழுதி கொடுக்கச் சொல். இல்லை என்றால் நீ இங்கிருந்து வெளியே போக முடியாது. உன்னை கொலை செய்துவிடுவோம்' என்று என்னை அவர்கள் மிரட்டினார்கள்.

நான், அங்கிருந்து போன் மூலம், என் அண்ணனை தொடர்பு கொண்டு பேசி, நடந்த விவரத்தை கூறினேன். அதைத்தொடர்ந்து மறுநாள் என் அண்ணன் சுந்தரராஜன் தனது பெயரில் அவினாசி வேலாயுதம்பாளையத்தில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 4 1/2 ஏக்கர் நிலத்தை அவினாசி சார் - பதிவாளர் அலுவலகத்தில் கனகராஜ் பெயருக்கு பதிவு செய்து கொடுத்தார். அதன் பின்னர் தான் ஒன்றிய தி.மு.க அலுவலகத்தில் இருந்து என்னை விடுவித்தனர்.

அதன் பின்னர் நான் பலமுறை கேட்டும், 32 பிளாட்டுகளுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து கொடுக்காமல், என்னிடம் பணம் கேட்டு மிரட்டி, என் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து மனைவி கையெழுத்து போட்ட 2 வெற்று காசோலைகளை கனகராஜ் வாங்கி கொண்டார்.

இதுவரை அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், என்னை ஏமாற்றி வருவதுடன் பல கோடி மதிப்புள்ள நிலங்களையும் மிரட்டி வாங்கி விட்டார். மேலும் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். எனவே கனகராஜ், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் என்னை மிரட்டிய மூலனூர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் பேரில், பிரிண்டிங் உரிமையாளர் கனகராஜ், முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் மூலனூர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் சிலர் மீது திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை நேற்று போலீசார் கைது செய்து திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் உள்ள பிரிண்டிங் உரிமையாளர் கனகராஜையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இருவரையும், தாராபுரம் அழைத்து சென்று தாராபுரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி சண்முகவேலு முன்னிலையில் பகல் 12 மணிக்கு ஆஜர் படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட கனகராஜ், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இருவரையும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இருவரும் கோவை அழைத்துச்செல்லப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com