வழுக்கி விழுந்ததில் காயம், வீரபாண்டி ஆறுமுகம் ஓட்டு போடவில்லை
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வீட்டில் வழுக்கி விழுந்ததால், சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஓட்டளிக்கச் செல்லவில்லை. தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மேட்டூர், இடைப்பாடி உள்ளிட்ட இரண்டு நகராட்சி, 19 பேரூராட்சி, 12 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில், இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. வீரபாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூலவாரியில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வசித்து வருகிறார். இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில், வீராண்டி ஆறுமுகத்தின் மருமகள் பிருந்தாசெழியன், பூலவாரி ஊராட்சி தலைவர் பதவிக்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, அவரது சகோதரர் மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்டோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சில தினங்களுக்கு முன், வீரபாண்டி ஆறுமுகம், வீட்டில் வழுக்கி விழுந்தார். அருகில் இருந்த, "டீப்பாய்' மீது விழுந்ததில், அவரது இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனால், நேற்று நடந்த உள்ளாட்சி இரண்டாம் கட்டத் தேர்தலில் ஓட்டு போட, அவரால் செல்ல முடியவில்லை.

