வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா ஒத்துழைக்கும் - மன்மோகன் நம்பிக்கை

போபால் விஷவாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வருவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

டொரன்டோவில் நடைபெற்ற ஜி-20 தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு தில்லி திரும்புகையில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்புவதில் அமெரிக்கா சாதகமாக நடந்து கொள்ளும் என நம்புகிறோம். இருப்பினும் இது தொடர்பாக அதிபர் ஒபாமாவுடன் எதுவும் பேசவில்லை. அவருடனான பேச்சின் போது இந்த விவகாரம் எழவில்லை.

இரு நாடுகளுமே அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. எனவே வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்பும் விஷயத்தில் மிகவும் சாதகமான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். இருப்பினும் இது தொடர்பாக இதுவரை அமெரிக்காவிடம் கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.  பெரிய விஷயங்களைப் பேசியதால் இந்த விவகாரம் இடம்பெறவில்லை.

போபாலில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவு காரணமாக 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 1984-ம் ஆண்டு வாரன் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து தப்பிப்பதற்கு மத்திய அரசு அல்லது மாநில அரசு காரணமா? என்பது இதுவரை தெளிவுபடுத்தாதது ஏன்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விஷயத்தில் எதையும் மறைக்கவில்லை. யதார்த்தமான விஷயத்தை வெளிப்படையாக தெரிவித்துவிட்டோம் என்று குறிப்பிட்டார்.

போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பாக யூனியன் கார்பைடு ஆலையின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் 2,000 டாலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணையின்போது ஆஜராகி, வழக்குக்கு ஒத்துழைப்பதாகக் கூறிச் சென்ற ஆண்டர்சன் அதன் பிறகு இந்தியாவுக்கு வரவேயில்லை.

இந்த வழக்கின் தீர்ப்பில் ஆண்டர்சனைப் பற்றி எதுவும் குறிப்பிடாதது மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆண்டர்சன் தப்பிச் செல்ல உதவியது யார்? என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்து உருவானது. ஆண்டர்சனை தலைமறைவு குற்றவாளி என போபால் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு, ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து செல்வதற்கு யார் அனுமதி அளித்தார்கள் என்பது தெளிவாக இல்லை. இத்தகைய முடிவை எடுத்தது யார் என்பதற்கான ஆவணம் ஏதும் இல்லை.

ஆண்டர்சன் தப்பிச் சென்றதில் அரசு, நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயலிழந்ததன் வெளிப்பாடாகக் கருத முடியாது. இருப்பினும் அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் குழு தீர்மானித்தது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

நீதிமன்ற நடைமுறைகள் எப்போதுமே நீண்ட காலம் எடுத்துக் கொள்பவை. இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. நமது நீதிமன்ற நடைமுறையில் உள்ள குறைகளை போக்க வேண்டும் என்றார் மன்மோகன் சிங். 

For Advertisement Contact:
33-1/7, Venkat Narayana Road,
Nandanam, Chennai - 600 035.
TamilNadu, India.
Phone :
+91 44 4212 7170
Mobile :
+91-98417 41392
+91-98418 69379
Email :
editor@thangamonline.com