வீடு இல்லா அனைவருக்கும் வீடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் - தா.பாண்டியன் பேச்சு
தமிழகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார். சென்னை நகரில் சுமார் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குடிசைப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும், கூவம் போன்ற கால்வாய் ஓரங்களிலும், கோயில் நிலங்களிலும், அரசு, மாநகராட்சி, மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்களிலும் பல்லாண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னை நகர பிரதான மயானங்களைச் சுற்றி குடிசை வீடுகளில் வாழ்கின்றனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தங்கள் பிழைப்பைச் சார்ந்து சாலையோரங்களில் வாழ்க்கை நடத்துவோர் ஏராளம்.
தமிழக அரசு தன் பொறுப்பை உணர்ந்து சென்னை நகரில் அரசு மற்றும் எல்லா வகையான அரசு சார்ந்த நிலங்களில் நீண்டகாலம் குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியம் மூலமாக மனை ஒதுக்கீடு பெற்ற குடிசைப்பகுதிகளில் உலக வங்கித் திட்டத்தின்கீழ் மனை அபிவிருத்திக்காகப் பெற்ற கடனையும் அதற்கான வட்டியையும் முழுவதுமாக ரத்து செய்து இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புதாரர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். சாலையோரங்களில் குடியிருக்கும் குடும்பங்களை முழுமையாகக் கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அத்தகைய மக்களுக்கு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அவர்கள் பிழைப்பு நடத்தும் பகுதியை ஒட்டியே அடுக்குமாடி வீடுகள் கட்ட போதிய நிதி ஒதுக்கி அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
கூவம் கரையோரம் வாழும் குடிசைவாசிகளை பலாத்காரமாக வெளியேற்றுவதை உடனே கைவிட வேண்டும். அம்மக்கள் விருப்பம் அறிந்து உரிய மாற்று வீடுகளை அவர்களுக்கு பிழைப்பு ஆதாரமாக விளங்கும் சென்னை நகருக்குள் வழங்க வேண்டும். சென்னையிலுள்ள குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில், பழுதடைந்த நிலையில் வாழத்தகுதியற்ற நிலையிலுள்ள கட்டடங்களை இடித்துப் புதிதாக கட்டித்தர வேண்டும். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். இலவச வீடு கட்டும் திட்டங்களின் விதிகளைத் தளர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக்குழு சார்பில் வியாழக்கிழமை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது: சென்னை மாநகரில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பமாக, குழந்தைகளுடன் சொந்த குடியிருப்பு இல்லாமல் சாலையோரங்களில், பிறந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் இந்தக் கொடுமை நிலவி வருகிறது. தமிழக அரசும் இதை ஒப்புக்கொண்டு குடிசையில்லா நகரை அமைப்போம் என்று அறிவிப்பும் செய்துள்ளது. அறிவிப்பைத் தொடர்ந்து அதிகாரிகளின் கணக்கெடுப்பு முடிவுகள் வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. ஆனால் அதற்கான அதிகாரிகளின் நடவடிக்கை எங்கும் நடப்பதாக தெரியவில்லை.
தமிழக அரசு சென்னை அருகே கும்மிடிப்பூண்டி பகுதியில் 1600 ஏக்கர் நிலத்தை கப்பல் கட்டும் தளம் அமைக்க கையகப்படுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல் 1500 ஏக்கர் நிலப்பரப்பை விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக புதிய நகரை உருவாக்க ஒதுக்கி உள்ளது. 194 ஏக்கர் நிலத்தை திரைப்படக்கலைஞர்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகட்டுவதற்காக 24 ஆயிரம் சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாங்கள், எங்களுக்கு 1000 ஏக்கர், 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்கவில்லை. தங்களது சொந்த மண்ணில், பிறந்த மண்ணில் 3 சென்ட் நிலம் வழங்குமாறு கேட்கிறோம்.பெரிய முதலாளிகளுக்கு 1000, 100, 200 ஏக்கர்கள் என்று இந்த அரசு வளைத்துக்கொடுக்கிறது.
ஏழைகளுக்கு 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை உள்ளவர்கள் வாழும் பகுதிகளை இடிப்பதை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும். தமிழக மக்களை அவர்கள் வேலை செய்யும் இடங்களிலேயே குடியமர்த்த வேண்டும்.
யார், யாருக்கவோ நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் அரசே, உங்களுக்காக வாக்களித்த மக்களுக்கு வீடு கொடு என்றே நாங்கள் கேட்கிறோம். குடிமக்கள் அடிப்படை உரிமை கேட்டு வந்துள்ளோம். மதுரையில் குடிசைப் பகுதிகளை அகற்றி உயர்நீதி மன்ற வளாகம் கட்டப்பட்டது. அந்த வளாகத்தில் அமர்ந்து கொண்டு மேலும் குடிசைகளை இடிப்பதற்கு உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.
சென்னை அருகே உள்ள அம்பத்தூர் ஏரியில் தமிழக அரசும் உலக வங்கியும் சேர்ந்து ஏரிக்குள்ளேயே பெரிய நகரை உருவாக்கியுள்ளன. ஆனால் ஏரிக்கரையோரம் கட்டியுள்ள வீடுகளை இடிக்கின்றனர். குடியிருக்கும் மக்களுக்கு முதல்வர் கொடுத்த வாக்குறுதியின் படி வீடுகள் கட்டித்தர வேண்டும்.
சென்னை நகரில் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டால், சென்னை நகரில் சென்ட் விலை என்ன என்று கேட்டு 1 லட்சம் வரை லஞ்சம் கேட்கிறார் தாசில்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் வீடு இல்லா அனைவருக்கும் இலவச மனைப்பட்டா வழங்கவில்லை என்றால் அதற்கான இடங்களை நாங்களே கையகப்படுத்துவோம். அதற்கான போராட்டம் தமிழகம் முழுவதும் தற்போது நடந்து வருகிறது. சில இடங்களில் கையகப்படுத்தியும் உள்ளோம். சென்னை நகரில் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.

