ஹாக்கி, இந்திய அணி மீண்டும் வெற்றி
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க ஆண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் 4-0 என வெற்றி பெற்ற இந்தியா, 1-0 என முன்னிலை வகித்தது. நேற்று இரண்டாவது போட்டி டில்லியில் உள்ள தயான் சந்த் தேசிய மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்தியாவின் சின்ஜல்சானா சிங் முதல் கோல் அடித்தார். இதற்கு தென் ஆப்ரிக்க வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தென் ஆப்ரிக்காவுக்கு, 43வது நிமிடத்தில் லான்ஸ் லோவ் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பை சந்தீப் சிங் கோலாக மாற்ற, ஆட்டநேர முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

