7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை துணை செயலாளர் எஸ்.நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். 'சிப்காட்' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
கோவை மாவட்ட கலெக்டராக எம்.கருணாகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் டி.என். ஹரிகரன் மாற்றப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
'சிப்காட்' முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.சபீதா, பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலாளரும், உயர்கல்வித் துறை செயலாளருமான (பொறுப்பு) டி.எஸ்.ஸ்ரீதர் மாற்றப்பட்டு, உயர் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனர் சந்தோஷ் கே.மிஸ்ரா மாற்றப்பட்டு, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் (டி.என்.பி.எல்.) நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

