பாட்மின்டன் காலிறுதியில் அஜய் ராம்
ஹோசிமிங்: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு இந்திய வீரர் அஜய் ராம் முன்னேறியுள்ளார்.
வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் வியட்நாமின் ஹோசிமிங் நகரில் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அஜய் ராம், கொரியாவின் ஜோங்உயை எதிர்கொண்டார். இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜய் ராம் 21-8, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் இவர், இந்தோனேசியாவின் அலம்சியா யுனஸை சந்திக்க உள்ளார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து, இந்தோனேசியாவின் அப்ரில்லாவை 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். சிந்து காலிறுதியில் சீனதைபேயின் டிஜியு யங்யை சந்திக்க உள்ளார்.
கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அபர்ணா பாலன், அருண்விஷ்ணு ஜோடி, வியட்நாமின் நகுயன், நிகோ குயன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் அபர்ணா ஜோடி, 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

